Wednesday, 5 October 2011

எங்கெங்கு காணினும் சக்தியடா!! (Devotional-Navarathri Spl-Shakthi) - 2

சென்ற பதிவின் தொடர்.......

இடைவேளை நீண்டதானாலும் என்னை மறக்காமல் என் பதிவை எட்டிப்பார்த்து கமெண்ட் போட்டு என்னை ஊக்குவித்த  அனைவருக்கும் நன்றிகள்.  என்னை தன் பதிவில் அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்திய சகோதர சகோதரிகளுக்கு நன்றி என்கிற 3 எழுத்துக்களில் சொல்லி முடித்துவிட முடியாது. ஆனாலும் நீங்கள் அனைவரும் எனக்கு கொடுக்கும் உற்சாகமே என்னை இன்னும் பதிவுலகில் வலம் வர வைத்திருக்கிறது.

சென்ற தொடரில் சக்தி வழிபாடுபற்றியும் எந்தெந்த தேசங்களில் எந்தெந்த பெயர்களில் வழிபாடு நடைபெற்றது என்பதையும் பார்த்தோம். இப்பொழுது நவராத்திரியில் வழிபடப்படும் அன்னையின் பிற வடிவங்களின்  பெயர்களையும் தாத்பர்யங்களையும் காண்போம்...

துர்க்கை

நவராத்ரியில் முதல் 3 நாட்கள் துர்க்கைக்கு உரியவையே. 

நல்ல செயல்களாக இருந்தாலும் தீய செயல்களாக இருந்தாலும் இரண்டுமே ஆத்ம சாதகனை உயர்நிலையை அடையவிடாமல் செய்யும் மாயைகளே. தீமையை விலக்குவதோடு நன்மையையும் விலக்கி அனைத்தையும் பிரம்மமாக உணர்வதே மனித வாழ்க்கையின் உன்னத இலட்சியமாகும்.துர்க்கை மகிஷாசுரமர்தினியாகக் காட்சி தருகிறாள். சிங்கத்தின் மீது நின்றுகொண்டு அவள் அசுரனை பயங்கரமாகத் தாக்குகிறாள்.  கருமைநிறமுடைய அந்த அசுரன் ஆணவம், அறியாமை, மயக்கம், கோபம்ஆகிய தமோ குணத்தின் உருவமாக விளங்குகிறாள்.  பச்சை நிறம் கொண்ட துர்க்காதேவி சிவப்பு நிற  சேலை அணிந்திருக்கிறாள். அவள் எட்டு கைகளிலும் பலவித ஆயுதங்கள் ஏந்தி குணமயி என்று அழைக்கப்படுகிறாள்.  துர்க்கா தன் தொழிலுக்கு ஏற்ப ரஜோ குணம் கொண்ட உருவமாகத் திகழ்கிறாள்.

மகிஷாசுரமர்த்தினி

துர்க்கை ரஜோ குணத்தின் வடிவமாகத் திகழ்கிறாள்.  அரக்கன் தமோகுணத்தின் வடிவமாக விளங்குகிறாள். போரின் முடிவில் அரக்கனின் தீய குணங்கள் இயல்புகள் எல்லாம் அடியோடு அழிந்து அருளும் ,ஞானமும், கலையும், அருட்செயலும் , பேராற்றலும் தோன்றுகின்றன.  இந்த உண்மையை துர்க்கையின் இரண்டு பக்கங்களிலும் இரு்க்கும் சரஸ்வதி,  லட்சுமி வினாயகர் சுப்பிரமணியர் ஆகிய தேவதேவியரின் திருவுருவங்கள் விளக்குகின்றன.  பிறகு குணங்களை கடந்து விளங்கும் அதி உயர்ந்த நிலையாகிய பரம்பொருள் அடையப்பெருகிறது. இந்தக் கருத்தையே சிவபெருமானின் புறத்தோற்றமாகிய வெண்ணிறமும் அவருடைய உள்ளார்ந்த ஆழ்ந்த நிஷ்டையும் குறிப்பிடுகின்றன.

2.  காளி

காலம் என்ற தத்துவத்தின் சிறந்த விளக்கமாக காளி விளங்குகிறாள். காலத்தை தன்னுள் ஒடுக்கி வைத்திருக்கும் மாபெரும் சக்தியே காளி.
 திகம்பரி, முண்டமாலினி, கர்மருபிணி, பயங்கரி போன்ற பலநாமங்கள் காளியையே குறிக்கும்.

திகம்பரி

எல்லாத்திசைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பதனால் காளிக்குத் திகம்பரி என்ற பெயர் உண்டு.


முண்டமாலினி

காளிதேவியின் மற்றொரு திருநாமம் முண்டமாலினி. தலைகளால் கோர்க்கப்பட்ட மாலையை அணிந்தவள் என்பது அதற்குப் பொருள். குழந்தைப் பருவத்திலிருந்து வயோதிகபருவம் வரையிலுள்ள தலைகளைக் கொண்டு அந்த மாலை கட்டப்பட்டிருக்கும். மரணம் ஐந்திலும் வரலாம் ஐம்பதிலும் வரலாம் என்ற நிலையற்ற தன்மையை குறிப்பது இந்த மாலைகள்.  எல்லா உயிர்களிலும் ஆதிசக்தியிடமிருந்து தோன்றி மீண்டும் அவளிடமே ஐக்கியமாகின்றது. மரண்திலிருந்து யாரும் தப்பிவிட முடியாது. இந்த உலகம் அவளது விளையாட்டு மைதானம். கொடுத்த உயிரை மீண்டும் எப்பொழுதும எடுத்துக்கொள்வாள் என்பதை பல வயதுடைய தலைகள் குறிப்பிடுகின்றன.

கர்மருபிணி

செயல்கள் அனைத்திற்கும் சக்தியாக இருப்பவள் காளிதேவி. இதை அவள் அணிந்திருக்கும் துண்டிக்கப்பட்ட கைகளால் ஆகிய ஓட்டியாணம் விளக்குகிறது. உலகில் எங்கெல்லாம் பெரும் சக்தியின்  வெளிப்பாடு உள்ளதோ அங்கெல்லாம் தேவியின் வீரக் கரங்கள் எங்கும் எதிலும் நீண்டு பரந்திருக்கின்றன.

பயங்கரி

ஒரு கையில் வாளையும் மற்றொரு கையில் துண்டிக்கப்பட்ட ஒரு தலையையும் தேவி தாங்கி நிற்கிறாள்.வெட்டிய தலையும் இரத்தக்கறை படித்த வாளும் துன்பத்தின் அறிகுறியாகும் பேராசை, ஆணவம், சுயநலம், அநீதி, அதிகார வெறி எங்கெல்லாம் ஆட்சி புரிகின்றதோ அங்கெல்லாம் காளிதேவியின் கோரவாளும் ஆட்சி செய்யும்.  தர்மத்துக்கு மாறாக எது நடந்தாலும் அதனுடைய முடிவு அழிவாகத்தான் இருக்கும் என்பதை துண்டிக்கபட்ட தலை விளக்குகிறது.


காளிதேவி சுடுகாட்டில் ஊழிக்கூத்து ஆடுபவளாக, சிவனே அதற்கு ஆதாரமான மேடையாக தம் உடலையே கொடுப்பவராக சிவன் மேல் காளி ஆடும் நிலையில் திருஉருவம் அமைந்திருக்கிறது.

காளியை தள்ளி இருந்து பார்ப்பவர்களுக்கு , பக்தியால் அவளைஉணராதவர்களுக்கு அவள் கருமை நிறத்தவளாக, பயங்கரியாகவும் தோன்றுகிறாள். ஆனால் அவளுடைய குழந்தையாகிவிட்டவர்களுக்கு பால் நினைந்துட்டும் உலகத்தாயினும் மேலான தயாபரியாகவே அவள் திகழ்கிறாள்.


லட்சுமி தேவி எத்தனை விதங்களில் , எத்தனை பெயர்களில் நவராத்திரியில் வழிபடப்படுகிறாள் என்பதையும் சரஸ்வதியின் வழிபாட்டையும் அடுத்த தொடரில் காண்போம் , ஆதிசக்தியின் சித்தமிருந்தால்....

அனைவருக்கும் சரஸ்வதி பூஜா வாழ்த்துக்கள்..........

முந்தைய பதிவைப்பார்க்க இங்கே கிளிக் செய்யவும். 
எங்கெங்கு காணினும் சக்தியடா.!! பாகம் - 1


Friday, 30 September 2011

எங்கெங்கு காணினும் சக்தியடா..!! (Devotional - Navarathri Special - Shakthi)

அன்பான உறவுகளுக்கு வணக்கம்.  மிக மிக நீண்............ட இடைவெளிக்குப்பிறகு உங்களை நவராத்ரி சிறப்பு ஆன்மீகப் பதிவின் மூலம் சந்திப்பதில் பெருமிதப்படுகிறேன். நான் கமெண்ட் வழியாக உங்கள்  அனைவரையும் அனுதினமும் அன்பாய் விசாரித்துதான் வருகிறேன்.

என் பதிவையும் எதிர்நோக்கி, அக்காச்சி பதிவெங்கே என்று அன்பாய் மிரட்டிய சகோதரர்களுக்கும் என் சோகம் அறிந்து அதில் பங்குகொண்ட என் நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் வருகை இனி சீரான இடைவெளியில் இருக்குமென்று நம்புகிறேன்.
நவராத்திரி ஆரம்பித்தாகி விட்டது. நான் பயங்கர பிஸிதான் பூஜை, சுண்டல் பொங்கல் என்று எக்கச்சக்க ஐட்டம் இருக்கே..  சரி அதிகநாள் கழித்து எழுதும் பதிவு தேவி வழிபாடு பற்றி நவராத்திரி நேரத்தில் எழுதலாமே என்றுதான் ஆரம்பித்தேன்..... இது ஒரு தொடர் பதிவுதான். என்னை ஊக்குவிக்கும் அன்பு உள்ளங்களுக்கு மறுபடியும் என் நன்றிகளை நவில்கிறேன். சரி விஷயத்துக்கு வர்றேன்.

எத்தனை விதங்களில் எத்தனை தேசங்களில் இந்த சக்தி வழிபாடு எந்தெந்த பெயர்களில் நடந்திருக்கிறது, இப்பொழுதும் நடக்கிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யத்தில் மயக்கமே வருகிறது...

இந்தியாவில் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தேவி வழிபாடு நடந்திருக்கிறது என்பதை மொகஞ்சதாரோ. ஹரப்பா போன்ற இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த தேவி மண் சிலைகள் கூறுகின்றன. சிந்து சமவெளி பகுதிகளில் கிடைத்த சக்தி தெய்வத்தின் சிலைகள் போலவே பாரசீகம், மொசடோமியா, பாலஸ்தீனம், சைப்ரஸ், கிரேக்கம், எகிப்து, துருக்கி முதலிய இடங்களிலும் கிடைத்திருப்பதாக ஆராய்சியாளர் சர் ஜான் மார்ஷல் கூறுகிறார்.

ரிக் வேதத்தில் தேவி ஸூக்தம் என்னும் பகுதியில் அன்னையை உஷஸ், ராத்திரி, அதிதி, வாக், பரந்தி, திஷணா, இடா, வாருணி என்ற நாமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரானந்தத்ததை அருளும் பரசிவத்தின் அருள்சக்திதான் பராசக்தி என்று சைவசித்தாந்தம் கூறுகிறது. தந்திர சாஸ்திரங்களில் அம்பிகையை பத்து வடிவங்களில் ”தச மகாவித்யா” என்றே அழைக்கிறது. 

தேவி உபாசகர்கள் அன்னையை ஆறுவிதங்களில் கூறுகிறார்கள். அவை பராசக்தி, ஞானசக்தி, இச்சாசக்தி, கிரியா சக்தி, குண்டலினிசக்தி, மாத்ருகா சக்தி என்பதே அந்த ஆறு சக்திகள். நம் பாரத நாட்டில் பூமி கடல் ஆறு நாடு முதலியனவும் அன்னை தேவியின் வடிவமாகவே நாம் பார்க்கிறோம். 
சக்தி வழிபாடு குறித்து சுவாமி விவேகானந்தர் தம் "கீழைநாடும் மேலைநாடும்" என்ற கட்டுரையில் ”இந்த சக்தி வழிபாடு வெளிப்படையாகவே எங்கும் இருந்து வருகிறது. ரோமன் கத்தோலிக்க மதம் மட்டுமே ஐரோப்பாவில் உள்ளது. அந்த மதத்தில் ஜெஹோவாவோ அல்லது ஏசுவோ அல்லது திரிமூர்த்தியோ இரண்டாவது ஸ்தானம் பெற்றிருக்கின்றனர். அங்கே தாய்க்குத்தான் வழிபாடு. குழந்தை ஏசுவைக் கையில் ஏந்திய தாய்தான் பூஜிக்கப்படுகிறாள். எங்கும் எல்லா இடங்களிலிருந்தும் இரவு பகலாக ”ஆவே மரியா! ஆவே மரியா!” என்ற ஒலிதான் கேட்கிறது” என்கிறார். 

பிரம்மா முதலிய தேவர்களாலும் அறிந்து கொள்ள இயலாதவள் அஜ்ஞேயா, அந்தம் அல்லது முடிவு இல்லாதவள் அனந்தா. எவராலும் கிரகிக்க முடியாதவள் அலஷ்யா. ஆரம்பம் இல்லாதவள் அஜா. எங்கும் ஒருத்தியாக இருப்பவள் ஏகா. ஒருத்தியே பல ரூபமாக இருப்பவள் நைகா என்று தேவி உபநிஷத் கூறுகிறது. 

எங்கும் பரந்து விரிந்துள்ள அவளது நிலையை பூரணி, பராசக்தி, இராஜராஜேஸ்வரி,  மூலப்பிரகிருதி ஆகிய திருநாமங்கள் உணர்த்துகின்றன.  படைத்தலை செய்யும்போது அவள் பிரம்மணி. காத்தலை செய்யும்போது அவளே வைஷ்ணவி. அழித்தலை செய்யும்போது ருத்ராணி எனப்படுகிறாள்.

நவராத்திரியில் வழிபடப்படும் அன்னையின் பல வடிவங்களை இனி வரும் நாட்களில் பார்ப்போம்.....
* * * * * * *

Friday, 26 August 2011

என்னை ரசிக்கும் என் கவிதையே! உன்னை ரசிக்கும் என் கவிமலர்களே!!.
நீ என் மனதை ரசிப்பதாக
கூறியபிறகு.....
என் கவிதைகளெல்லாம்
உன்னை மட்டுமே
ரசிக்கத் தொடங்கிவிட்டன!!


படித்ததும் திரும்ப ஒப்படைக்க
நூலக புத்தகமல்ல
இதயம்!!

கைநழுவி உடைந்தாலும்
திரும்ப ஒட்டிக்கொள்ள
பிளாஸ்டிக் அல்ல
மனது!!


இந்த பூமியின்மீது
ஒரு
புதிய கோள் விழுந்தாலும்  
பூமியின் உடம்பு
புண்ணாகிவிடாது!!
ஆனால் உன்
கண்ணீர் பூவிலிருந்து 
ஒரு காம்பு
கழன்றுவிழுந்தாலும்.....
என்
கவிதையின் உடலில்
காயம் பட்டுவிடும்!!!

Wednesday, 27 July 2011

குயிலின் மறுக்கப்பட்ட கீதங்கள்!! மலரின்உணரப்படாத மௌனங்கள்!!என் வீதியில் உலாவரும்
எல்லா வாகனங்களையும்
கேட்கவில்லை இடம்.

என் மன்னவனின்
மன வாகனத்தில்
கடுகளவு
எனக்கிடமிருந்தால்
போதும்!


கல்யாணி ராகத்தைக்
காணாமலேயே
முகாரியிலேயே என்பாடல்
முடிந்து விடுமா???

* * * * *

ஓ...பரிதாபத்துக்குரியவளே!!
அடுப்படியில் அழுக்கோடு
அனுதினமும் ஆடிஓயும்
அதிர்ஷ்டமில்லா நீ!!
அடுப்பில் உணவு சமைத்தபோது
அடுப்புக்கே உணவானதேன்??
அரக்ககுண மாமியாரின்
அளவில்லா கொடுமையினாலோ??

* * * * * * *இருண்ட இரவுகளில்
துயர மனதுடன்
தூங்காமல்,
விழி ஒளியையே
விளக்காகக் கொண்டு
நானெழுதும் இந்தக் கவிதைகளை
பகலின் வெளிச்சத்தில்
படித்துப்பார்ப்பவர்களால்
புரிந்துகொள்ள முடியாது!!
* * * * * *

Wednesday, 13 July 2011

நான் ரசித்த விளம்பரம் !! யாரோ மாத்தி யோசிச்சுட்டாங்க!!!!

வோடஃபோன் விளம்பரத்தில் வந்த நாய் உண்மையில் நினைத்தது இதுவாகக்கூட இருக்கலாம்... smile please..
வாய்விட்டு சிரிங்க......நோய் விட்டு போகுமுங்க!

நாய் உண்மையில் என்ன நினைக்கிறது???????

 ம்ம்...!! இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல!!

டேய் கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலே .
 இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு 
         
ஹய்யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கேடா.

 
 டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு


  நீ சைலண்ட்டா நில்லு நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்.

ஒழுங்க கட்டுடா எருமை. 

 என்னம்மா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா..!?

  இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே.
சீக்கிரமா முடிமா தண்ணி அடிக்கணும்ல.

தேடு தேடு நல்லா தேடு   

இதெல்லாம் அவங்ககிட்டே சொல்லிடாதீங்க. அடிச்சும் கேட்பாய்க அப்பயயும் சொல்லிடாதீங்க.... பாஸ்...! ப்ளீஸ்...!
* * * * * * *

Monday, 11 July 2011

தானத்தில் சிறந்த தானம் ????"எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன”  ஈயாதாரிடம் செல்வம் இருந்தென்ன பயன்? நான் இதைச்சொல்லவில்லைங்க. நம்ம பாட்டி ஓளவையார்தான் நச்சுன்னு சொல்லியிருக்காங்க. 

 தர்மம், தானம் என்கிற பெயரில் செய்திதாள்களில் புகைப்படங்களோடு நம் மக்கள் போட்டோ எடுத்து விளம்பரம் தேடிச் செய்கிற தானத்தை பற்றியோ தன் கருப்பு பணம் வெள்ளையாக மாற்றச் செய்யும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் தானத்தைப்பற்றியோ சொல்லப்போவதில்லை. உண்மையான தானம் என்றால் எப்படி இருக்கவேண்டும்? தானம் என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.  

”ச்ரத்தயா தேயம்! அச்ரத்தயா தேயம்! ச்ரியா தேயம்! ஹ்ரியா தேயம்!
பியா தேயம்! ஸம்விதா தேயம்!”                                 

                                                                                      -தைத்திரிய உபநிஷதம்(6)

இதோட அர்த்தம் என்னன்னா.....”நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும். ஏனோ தானோ என்று தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். பணிவுடனும், மரியாதையுடனும், தகுந்த அறிவுடனும் தானம் செய்ய வேண்டும்.”

நல்லா கவனிங்க. இந்த மந்திரம் சொல்கிற இந்த 4 விஷயங்ளோட செய்கிற தானம் மட்டும் தான் தானம் என்கிற கேட்டகரியில் வரும். மற்றதெல்லாம் சும்மா..............பெருமைக்கும் விளம்பரம் தேடவும் செய்கிற பப்ளிசிட்டிதான்.

1. முதல்ல ஏனோதானோனு கொடுக்கக்கூடாது. ஈடுபாடு வேண்டும். உண்மையில் நற்பணியில் ஈடுபடுபவனுக்கு இறைவனே மனித உருவில் வந்து உதவுவார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும.

2.வருமானத்தில் இயன்ற அளவு ஒரு பகுதியைக் கட்டாயம் தானம் செய்ய வேண்டும். அதே சமயம் வருமானத்தை மீறி தானம் செய்துவிட்டு தான் மற்றவர்களிடம் தானம் பெறுகிற நிலைக்கும் செல்லக்கூடாது.

3. வீட்டு பால்கனியில் நின்றுகொண்டு ருபாய் நோட்டுகளை விட்டெறிந்து பொருக்கிக்கொள்ளுங்கள் பிச்சைக்காரர்களே என்றும் தானம் செய்யாதீர்கள். ஒருவருக்கு தானம் செய்ததால்தானே உங்களுக்கு நீங்களே தானம் செய்ததன் பலனை அடையமுடிந்ததென்று அவரிடம் நன்றியுடன் இருங்கள். பெற்றுக்கொள்பவனல்ல. கொடுப்பவனே, பேறுபெற்றவன். தானம் செய்வதன் முலம் நீங்கள் இந்த உலகத்தில் தூய்மையையும் நன்னிலையையும் அடைய ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக நீங்கள் நன்றி உடையவர்களாக இருங்கள்.

என்ன ரொம்ப கஷ்டமான விஷயமா இருக்கா? என் பணத்ததையும் பொருளையும் நான் கொடுத்துவிட்டு நானே பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடாதென்றால் எப்படி என்கிறீர்களா?  

ஒன்றுமட்டும் நல்லா புரிந்துகொள்ளுங்கள். நம்மை எதிர்பார்த்து சிலர் வாழ்கிறார்கள். நம்மால் மட்டுமே மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று மனதுக்குள் கர்வமாய் நினைப்பதே உங்கள் பலவீனம். இந்த பெருமையும் கர்வமுமே அனைத்து துன்பத்திற்கும் காரணம்.
                                             

உண்மை என்னன்னா....இந்த உலகத்தில் ஒருவர்கூட நம்மை எதிர்பார்த்து வாழ்வதில்லை. ஒரு பிச்சைக்காரன் கூட நம் கையை எதிர்பார்த்து இந்த உலகத்தில் உயிர்வாழவில்லை என்பதே நூறு சதவீதம் அக்மார்க் உண்மை.
இயற்கையே கடவுள். அனைவருக்கும் இயற்கையே உதவி செய்கிறது. நம்மை மாதிரி தானம் பண்றவங்க இல்லாவிட்டாலும் இயற்கை தேவைப்படுபவர்களுக்கு உதவிக் கொண்டுதான் இருக்கும். உங்களுக்காகவும் எனக்காகவும் என்றும் இயற்கை தன் செயலை நிறுத்தாது. உதவிக்கொண்டேதான் இருக்கும்.

பிறருக்கு உதவுவது என்பது நம்மை நாமே பண்படத்திக் கொள்வதற்காக இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு. பெரும் பேறு என்று மனதார நினைக்க வேண்டும்.

இதில் இருக்கிற இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால். ”பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்பது பெரியோர் வாக்கு. நாம் ஒருவருக்கு ஒன்றை கொடுக்கும் முன் அது அவருக்கு தேவையிருக்கிறதா அந்த தானத்தால் அவர் பயன்பெறுவாரா என்பதையும் அறிந்த பின்னரே ஒன்றைக் கொடுக்க வேண்டும். ” பத்தோடு பதினொன்னு அத்தோடு இதுவொன்னு” என்று உபயோகபடுத்தாமல் முலையில், ஷோகேஸில் போட்டு வைக்கிறவர்களுக்கோ அல்லது ஏற்கனவே அதிகம் வைத்திருக்கிறவர்களிடம்   மேலும் மேலும் கொண்டு சேர்ப்பதைவிட உண்மையிலேயே இல்லாதவர்களிடம் தேடிப்போய் உதவுவதே உயர்ந்த செயல்.
                                                             

தற்காலத்தில் மிக மிக முக்கியமாய் நாம் செய்யவேண்டிய தானம் உயிரோடிருக்கும்போது இரத்ததானம். இறந்தபின் கண்தானம். இறந்தும் இறவாமலிருக்கும்போது உடல்உறுப்புதானம். ரொம்ப ரொம்ப அவசியம்ங்க. ஒவ்வொருவரும் ஒரு புதுவருடத்தில் அல்லது விஷேஷங்களில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஒன்றுகூடி ரெஜிஸ்டர் செய்ய வேண்டிய முக்கிய ஆவணமே உடல்உறுப்பு தானம்தாங்க. மண்ணும் நெருப்பும் தின்றுவீணாய்ப்போகிற இந்த உடல் உறுப்புகள் தேவைஇருப்பவர்களுக்கு பயன்பட்டால் இறந்தபின்பும் நாம் அனைவர் உள்ளத்திலும் நீங்காது வாழ்வோமே!. நண்பர்களே யோசியுங்கள்.! செயல்படுங்கள்! பதிவுசெய்யுங்கள் உங்கள் உடல் உறுப்புகளை என்றும சிரஞ்சீவியாய் வாழ்வதற்காக!


Wednesday, 29 June 2011

இப்படியும் பேசியிருப்பார்களோ??- நான் ரசித்த கோட்டுச் சித்திரங்கள்

இந்த அரசியல்வாதிகளை நம்பமுடியாதப்பா. இப்படியும் பேசியிருப்பார்கள். சும்மாக்காச்சுக்கும்.....ஒரு காமெடிதாங்க. நான் ரசித்ததை நீங்க முடிந்தால் ரசிங்க. இல்லைனா விடுங்க ஜூட்...
எதுவும் என் சொந்த கற்பனையல்ல. எனக்கு மெயிலில் வந்ததை நான் உங்களுடன் பகிர்ந்து ரசித்தேன்.
Thursday, 23 June 2011

என்ன தகுதியில்லை நம் பதிவர்களிடம்?

என்ன தகுதியிருக்கிறது??


                                               

தற்போது வெளியாகியுள்ள அவன் இவன் திரைப்படம் வெளிவந்தவுடன் நம் பதிவுலகில் தொடர்ந்து உலாவரும் ஒரு கேள்வியே மேலே நான் குறிப்பிட்டது.

”என்ன தகுதியிருக்கிறது எங்கள் பாலாவை விமர்சிக்க?”  என்ன ஒரு கொலைவெறியோட கேள்வி பாருங்க!

பாலா மிகப்பெரிய திறமையான படைப்பாளி என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஜீவாத்மாவா?... இல்லை பரமாத்மாவா?. அன்னை சீதாதேவியை தீக்குளிக்க வைத்தது சரியா தவறா என்று கடவுள் ஸ்ரீராமரையே விமர்சனம் செய்து பட்டிமன்றம் வைப்பவர்கள் நாம். நமக்கா பாலாவின் படத்தையும் அவரின் இயக்கத்தையும் விமர்சிக்கும் தகுதியில்லை??

திரைப்படக் கல்லூரி போய் DFD  படித்தவர்கள் மட்டும் தான் படம்பார்க்கவும் விமர்சிக்கவும் தகுதியிருக்கிறது என்கிறார்களா? இல்லை 4,5 படம் இயக்கி ஹிட்ஸ் கொடுக்கிற தகுதிவேண்டுமென்கிறார்களா? என்ன தகுதியை எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு சத்தியமா தெரியலைங்க...

ஐயா புண்ணியவான்களே, புண்ணியவதிகளே ஹோட்டலில் காசுகொடுத்து சாப்பிடுபவர்கள் சாம்பாரில் உப்பில்லை என்றாலோ, கூட்டில் காரம் இல்லை என்றாலோ சொல்லக்கூடாதா??  இதற்கு சமையல்கலை தெரிந்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. நன்றாய் ருசியறிந்து ரசனையோடு (வக்கணையாய்!!?) சாப்பிடத் தெரிந்திருந்தாலே போதுமானது.

அதுபோல்தான் ஒரு இயக்குனரின் இயக்கம், கதை இன்னபிறவற்றை விமர்சிக்க ஒரு இயக்குனராகவோ, கதைவசனகர்தாவாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

காசுகொடுத்து படம் பார்க்கும் யாருக்கும் அந்தப்படத்தையும் இயக்குனரையும் விமர்சிக்கும் உரிமையிருக்கிறது. தன் கை பணத்தை செலவழித்து, நேரத்தையும் செலவழித்து படம் பார்கிற ஒரு தகுதி போதாதா விமர்சனம் செய்ய??

பாலா தன் எல்லா படங்களிலு்ம் விளிம்பு மனிதர்களையே முன்னிலைப்படுத்தி படம் எடுக்கிறாரே. மற்ற கதைக்களத்துக்கும் வாருங்கள். வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கையையும் படமெடுங்கள் என்று விமர்சனம் எழுதுவது மாபெறும் கொலைக்கு்ற்றமாம். இப்படி சொல்ல உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது. இப்படித்தான், இவர்கள் கதையைத்தான் படமெடுக்க வேண்டுமென்று பாலாக்கு அறிவுரை சொல்ல நீங்கள் யார் ? உங்களிடம் கேட்டுத்தான் படமெடுக்க வேண்டுமென்ற தலையெழுத்து பாலாவுக்கு இல்லை.....இன்னும் என்னென்னவோ வசவுகள் அவன்இவன் திரைப்படத்தை நடுநிலையோடு விமர்சித்த நம் பதிவர்களுக்கு.

நாங்கள் ஒன்றும் பாலாக்கு எதிரி இல்லையே.  இன்னும் சொல்லப்போனால் அவரின் தீவிர ரசிகர்கள்தான். அபிமானிகள்தான். ஆனாலும் நம் அபிமான இயக்குனர் ஒரே டைப்பான கதைகளை திரும்ப திரும்ப எடுத்தால் எப்படி? ”பாலா உங்கள் அபரிதமான திறமையை வேறு வேறு கதைகளத்தில் காண்பித்து உங்களின் அடுத்த கட்ட வளர்சிக்கு, அடுத்த உயர்ந்த படிக்கு செல்லுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஒரே .ஃபிளேவரில் ஐஸ்கீரிம் வேண்டாமே. விதவிதமான ஃபிளேவரில் ரெடிபண்ணி எங்களுக்கு விருந்தளியுங்கள் என்றுதான் கேட்கிறோம். இப்படி கேட்பது ஒரு கொலைக்குற்றமா??
                                                      
சத்தியஜித்ரே இந்தியாவின் வறுமையைமட்டுமே தன் படங்களில் காண்பி்க்கவில்லையா?  சத்யஜித்ரே செய்யலாம் நம் பாலா செய்யக்கூடாதா என்கிறார்கள். 

ஐயா அதத்தானுங்க நானும் சொல்றேன். இந்தியாவுக்கு ஒரு சத்யஜித்ரே போதும். நம்ம பாலா பாலாவாகவே வெவ்வேறு கதைக்களத்துக்கு வரட்டும் என்கிறேன். எவராலும் வெல்லமுடியாத சிகரத்தை பாலா தொடவேண்டுமென்று ஆசைப்படுகிறோம். ஏனென்றால் நாங்களும் பாலாவின் தீவிர ரசிகர்கள்தான்.  எங்கள் அபிமான இயக்குனரின் இயக்கத்தை விமர்சிக்கும் தகுதியும் உரிமையும் எங்களுக்கில்லாமல் வேறு யாருக்கிருக்கிறது??

பெரிய இயக்குனர்கிட்ட அதிகப்படியாக எதிர்பார்த்து ஒரு ரசிகன் போவதில் தப்பொன்றுமில்லையே?. சேது, பிதாமகன், நந்தா எடுத்தவர்கிட்ட இன்னும் அதிகமாக ஒரு ரசிகனாக எதிர்பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது? 
சாதாரண சொதப்பல் படமோ, மசாலாப்படமோ எடுக்க பாலா என்கிற வித்யாசமான முயற்சியுள்ள அதிதிறமைசாலியான இயக்குனர் எதற்கு? இன்னும், இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் அவரிடம். அதற்கான தகுதி பாலாவிடம் உள்ளது. அவர் படத்தை விமர்சிக்கும் தகுதி, அவர் வளர்சியில் அக்கறைகொண்ட அவரது தீவிர அபிமானிகளான எங்களிடமும் உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, காசுகொடுத்து படம் பார்க்கிற தீவிரமான ரசிகர்கள் என்ற தகுதியைவிட வேறென்ன பெரி.........ய தகுதிவேண்டுமென்று சத்தியமாய் எனக்குத் தெரியல.... உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள் நண்பர்களே!!

Wednesday, 8 June 2011

பிரியமானத் தோழியே...!

நடனத்தில் வல்ல நகைமுக மாது
நளினத்தின் அழகோ மன்மதன் தூது.!
இடையின் அழகோ சிறு கொடியழகு
இதைவிட அழகு உலகத்தில் ஏது..!!??
சின்னஞ்சிறு சங்கதனில்
கருந்திராட்சை கோர்த்தாற்போல்
மின்னி மின்னி எழில் காட்டும்
கண்கள் வான தாரகையோ..!??

சித்திரையின் நிலவதுவோ
மின்னிடும் வதனமோ..??
பிரியமானவரை பிரிப்பதுதான்
பரமனின் விளையாட்டோ..?
நாமிருவர்தான் இதற்கு ஆதாரமோ..!?....
வான வெளியிலே நிலவது ஆடையிலே
நம்மிருவர் மனம் மட்டும்
சோகத்தில் மூழ்குவதேன்..?
உயிர்பிரியும் நிலையிலும்
உறவு பிரிவதிலே கொடுமையதிகம்
அதை அனுபவத்தில் உணர்ந்தபின்னும்
இன்னும் ஏனோ தயக்கம்..?
பிரிவைத் தவிர வழியில்லா நிலையில்
கண்ணீர்தான் நட்புக்குப் பரிசோ..??...
* * * * * * *

Friday, 3 June 2011

துயிலாத கண்கள்..!!

அவள் நிலவென்னும் வதனத்தில்
கண்களைக் காணவில்லை நான்....
கருவண்டுகளைத்தான் கண்டேன்..!!
அவள் இதழில்....
கோவைப்பழச் சிவப்பையே கண்டேன்!!
அன்னமே இவளிடம்தான்
நடைபயின்றதோ??


மானும் இவளைக் கண்டுதான்
மருண்டோடியதோ..??
மயிலும் நாட்டியத்தில்
தோல்விகண்டது இவளிடம்!!

குயிலின் குரல்கொண்டவள்
குன்றாத ஒளியை மேனியாக்கி,
எனக்கு துயிலாத கண்களைக்
கொடுத்துவிட்டாள்..!!
* * * * * * *

Wednesday, 1 June 2011

நிலவும் வானும், கதிரும் நானும்..!

இரவு வானம்

வான வீதியில்
மேகங்களை குடையாக்கி
நட்சத்திர குழந்தைகளு்டன்
நிலவுப் பெண்ணவள்
தன் காதலன் கதிரவனைத்
தேடித் திரிகிறாள்!!

* * * * *

நீலவான நீச்சல் தடாகத்தில்
தன் நட்சத்திர தோழிகளுடன்
நிலா இளவரசி
இரவில்
நீச்சல் பயில்கிறாள்...
* * * * *  


செங்கதிரவன் வரவு
உடல் எங்கும் நீலநிற உடையில்
நளினமாய் சிரித்திடும் பெண்ணவள்
தன் காதலனை கண்டதனால்
சிவந்த தன் முகத்தை
சிறிதுசிறிதாய் நாணத்தால்
உயர்த்துதல் போலே........
நீல சேலை கட்டிய மலைமகளின்
மெல்லிய உடலிலிருந்து
சிறிதுசிறிதெனவே தன்
முகத்தை உயர்த்தினான்
சிவந்த செங்கதிரோன்...!!
* * * * * * *

Tuesday, 24 May 2011

அழிக்க இயலாத கல்வெட்டுகள்..!!

நெஞ்சே இல்லா தந்தையின்
நெஞ்சுவலி நாடகத்தை நம்பி.......
அத்தை மகளை கரம்பிடித்து
ஆருயிரே உனைத் தொலைத்தேன்!
ஆனாலும்.......
என் ஆழ்மனதில்
உன் நினைவுகள்.......
ஆற்றுமணலின்
வண்டலென
மென்மையாய்.......
அழிக்க இயலாத
அழகான ஓவியமாய்..!

தலைமுறை இடைவெளியில்
தமையனுக்கும் தந்தைக்குமிடையில்
ஏச்சாலும் பேச்சாலும்........
மனமுடைந்து மரணம் யோசித்த தருணம்!
அன்பு வார்த்தைகளால் எனக்கு
புது உலகம் காட்டி
மறுவாழ்வு அளித்த
அன்பு தேவதையே......


என் மகளுடன்
நான் கொஞ்சும்
இந்தத் தருணம்......
நீயிட்ட உயிர்ப்பிச்சை!!

என் பெயரின்பின்
நானெழுதும் பட்டம்.....
அதற்கான உன் உழைப்பின்
ஞாபகங்களை கிள்ளிவிட்டுச்
செல்கிறது..!

என்னையும் உன்னையும்
பிரித்ததாய் எள்ளிநகையாடும்
இவர்களுக்குத் தெரியுமா..........
வானுக்கும் நிலவுக்கும்
பந்தம் பிரிக்க முடியாததென்பது........!
* * * * *

Saturday, 14 May 2011

அடுத்த தமிழக ஆட்சி எப்படி இருக்கனும்..?? - (Next-TN-Government)

என்ன நண்பர்களே..!??! எலக்சன் ரிசல்ட் பரபரப்புக் காட்சி ஓய்ந்ததா? சங்கர் பட கிளைமாக்ஸை விட பரபரப்பாய் கழிந்தது ஓட்டு எண்ணிக்கை காட்சிகள். இந்திய கிரிக்கெட் டீம் கலந்து கொண்ட பைனல்ஸ் பார்க்கிற மனநிலையோடு டீவி பெட்டி, கணிணி முன் தவமாய் தவமிருந்த மக்கள் அனைவருக்கும் இப்போ யார் கோப்பையை   மன்னிக்கவும் யார் ஆட்சியை கைப்பற்றியது என்று தெரிந்துவிட்டதல்லவா..?

இந்த மாற்றம் மக்கள் தந்தது என்பதில் எள்ளளவும் யாருக்குமே சந்தேமில்லை. யார் நல்லாட்சி தருவார்கள் என்ற எண்ணத்தில் யாரும் ஓட்டுப் போட்டிருக்க மாட்டார்கள். யாருக்கும் அம்மா மேலயோ, அ.தி.மு.க.மேலேயோ பெரிய அபிப்ராயம் ஏதும் இல்லை. ஏற்கனவே இருந்த ஆட்சியில் மாற்றம் வேண்டுமென்று விரும்பியதால் அ.தி.மு.க. வை விட்டால் இல்லையென்ற நிலையில் எடுத்த முடிவுதான் இது. ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ  சர்க்கரை என்ற நிலைதான் இது.

இந்த 5 வருடத்தில் மக்கள் படாதபாடுபட்டு இன்னொரு மாற்றத்தை எதிர்பார்க்க வைக்காமல் அம்மா ஆட்சி அமைய நாமெல்லோரும் ஆண்டவனையும், அம்மாவையும் வேண்டிக்குவோம்.

இந்த மாற்றத்ததை எதற்காக எதிர்பார்த்தோம் என்பதை அம்மா புரிஞ்சுட்டு நடந்தால் நமக்கும் நல்லது. அம்மாக்கும் நல்லது. அம்மா செய்யவேண்டியதும் செய்யக்கூடாததையும் எனக்கு தெரிஞ்சவரையிலும் கொஞ்சம் கடிதமாய் எழுதிவைப்போம். நம்ம பதிவர்கள் யாராவது என் கடிதத்தை அம்மாவிடம் சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கைதான். ஊதுகிற சங்கை ஊதிவைப்போம்.  காதில் விழுவதும் விழாததும் அவங்க அவங்க அதிர்ஷ்டம். (நம்ம அதிர்ஷ்டம்???)

1.விலைவாசி்: அப்பப்பா....... கடந்த 5 வருடங்களாய் மக்களை பாடாய் படுத்துவதில் முதலிடம் இந்த விலைவாசிக்குதான்.  முதல்வேலையே இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுதான். செய்வீங்களா?

2.மின்வெட்டு: ஆற்காட்டார் எங்களை வேக்காட்டில் நிற்கவைத்திருந்தார். சின்ன சின்ன தொழிற்சாலைகள், சிறு தொழில்நிறுவனங்கள் எல்லாம் சுத்தமாய் லாபம் பார்க்க முடியாமல் இழுத்துமுடிட்டு ஓடிபோக வைத்த பெருமை முழுதும் ஆற்காட்டாரையே சாரும். இது உடனே கவனித்து சரிசெய்யவேண்டிய மிக மிக முக்கிய அவசர வேலை.

3.குடும்ப அரசியல்:  இதில் நொந்து நூடுல்ஸ் ஆனவங்க தான் நாங்க..நீங்களும் சசி ஆன்டிய பி்ன்னாடி வச்சுட்டு இதை தொடர வேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கறேன்.

4.அணுகுமுறை:  நிச்சயமாய் நீங்க இதில் மாறியே ஆகணும். பழைய காலத்தை மறந்திருக்க மாட்டீங்கனு நம்பறேன். இந்த அணுகுமுறையால் தான் ஆட்சிகட்டிலில் இருந்து தலைகுப்புற போன முறை நீங்க விழுந்தது. எளிதில் யாரும் சுலபமாய் சந்திக்கும் மக்கள் தலைவராய் நீங்க இருக்கணுமே தவிர பால்கனி லேடியாய் கைகாட்டிட்டு போகக்கூடாது. அணுகுமுறையிலும் எளிமையானவராய் இருக்கணும்.

5.டிராபிக் ஜாம்:  நீங்க போயஸ் கார்டனில் குளிச்சுட்டுஇருக்கும்போதே இங்க சென்னை முழுக்க டிராபிக்கை நிப்பாட்டி வச்சு சட்டசபைக்கு போற உங்க காரை அத்தனை பேரும் மனசால சபிக்கவச்சாங்க. அய்யா ஆட்சியில் நிஜமாகவே இந்த கண்றாவியெல்லாம் இல்லை. 10 நிமிடம் முன்தான் டிராபிக் கன்ட்ரோல் பண்ணுவாங்க. டிராபிக் ஜாம் ஏற்படுத்தி மக்களை டிராஜடி பண்ணாதீங்க. நீங்க வருவதும் போவதும் உங்களை தேர்ந்தெடுத்த எங்களுக்கு டிஸ்டர்ப் ஆக இல்லாமல் பார்த்துக்கங்க.

6.சட்டசபை நடவடிக்கை:  சட்டசபை நடவடிக்கை ரொம்ப ரொம்ப டீசண்ட் ஆக இருக்கும்படி பார்த்துக்கங்க. யாரும் யாருக்கும் விரோதினு நினைக்காமல் எதிர் கட்சிகாரர்களாய் இருந்தாலும் யாரைப் பார்த்தாலும் இயல்பாய் பேசி குசலம் விசாரிக்கற அளவுக்கு உங்க மனசை விலாசமாய் வச்சுக்கங்க.

இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம். நீங்க ஆட்சிக்கு வரப்போறீங்க. இனிமேலாவது வீட்டுச் செலவில் ஏதோ இரண்டு ரூபா காசாவது மிஞ்சும்கற நம்பிக்கையில் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க கிளம்பறேன். (கான்பிடன்ஸ் மேடம் கான்பிடன்ஸ்) ஓவர் ஆக உங்க ஆளுங்க ஆடாமல் நாலுகாசோட மக்கள் மனசையும் சேர்த்து சம்பாதிக்கச் சொல்லுங்க. நீங்களும் சுயமா முடிவெடுத்து ஏதோ எங்களை மாதிரி ஏழைபாளைகளுக்கு நல்லது செய்ங்கம்மா.
* * * * * * *

Thursday, 5 May 2011

தேவதையைத் தேடினேன்
                                   எப்படி மறப்பேனுனை நான்????
                                   இவ்வுலகம் காணவந்த என்னை
                                   இன்முகம் காட்டி வரவேற்று
                                   உச்சிமுகந்த உனை........
                                   எப்படி மற்பபேனுனை நான்!!

                                   தன்முதலில் என் பிஞ்சுதேகம்
                                   ஏந்தியதுன் கரங்களே........
                                   முதலில் நான் ருசித்தது
                                   தேனில் நனைத்த தாலிஉரசி
                                   நீ தந்த செவ்வனையே.......
                                   எப்படி மறப்பேனுனை நான்!!

                                    தாயின் தர்மஅடியிலிருந்து
                                    அவ்வப்போது காப்பாற்றி
                                    இழுத்தோடும் உன்.....
                                    அன்பு உள்ளம்தனை
                                    எப்படி மறப்பேனுனை நான்!!!                                    ஊரார் கண்ணுபடுமென்று
                                    ஊரடி மண்ணுடனே எப்போதும்
                                    உலா வரும் உள்ளன்புமிக்க தேவதையே.....
                                    எப்படி மறப்பேனுனை நான்!!!!

                                    வீட்டு விஷேசங்களில்
                                    கையில் கம்புடன்
                                    இனிக்கப்பேசி வேலைவாங்கும்
                                    எங்கள் இல்ல இனிய குயிலே.....
                                    எப்படி மறப்பேனுனை நான்!!!
                                    சொந்த பந்தங்கள்
                                    பிளவுபட்டு சிதறாமல்.....
                                    தன் அன்பான அரவணைப்பால்
                                    கட்டிக் காத்த கங்காருவே........
                                    எப்படி மறப்பேனுனை நான்
                                                               
                                    பாட்டி வைத்தியம் முதல்
                                    வாழ்க்கை வெற்றியின்
                                    ரகசியம் வரை.........
                                    சொல்லிக்கொடுத்துச் சென்றவளே!!
                                    எமன் அழைத்தபோது மட்டும்
                                    சொல்லாமல் சென்றதேன்??!!
                                    எப்படி மறப்பேனுனை நான்!!.
                                                                              * * * * *

Friday, 29 April 2011

எதிரெதிரே இரு வீடுகள்..!!

எதிரெதிரே இரு வீடுகள்
எக்குத்தப்பாய் ஏற்றத்தாழ்வுகள்
வருடத்திற்கொன்றெனவே
தவறாமல் ஈன்றிடுவாள் ஒருத்தி...........

வாரம், நாள் தவறாமல்
பிள்ளைவரம் வேண்டி
கோயில்குளம்
சுற்றிடுவாள் மற்றொருத்தி..........

எதிரெதிரே இரு வீடுகள்
எக்குத்தப்பாய் ஏற்றத்தாழ்வுகள்!
குடிக்க கூழ் இல்லாமல்,
விளையாட சொப்புசாமானில்லாமல்...........
வயிறு ஒட்டி
வறுமை கொடிகட்டி
வாழ்ந்தது ஒரு வீட்டில்..........

அள்ளிப்புசித்திட ஆளில்லாமல்
ஆறிக்கிடக்கும் அறுசுவையுணவுடன்........
வறுக்கே வறுமைவந்து
வளமுடன் நிற்குது
மற்றொரு வீட்டில்..........

எதிரெதிரே இரு வீடுகள்
எக்குத்தப்பாய் ஏற்றத்தாழ்வுகள்!

எந்தையின் திருவுளம்
எவரொருவர் அறியவல்லார்???
* * * * * **

Wednesday, 27 April 2011

சின்னச் சின்னக் கவிதை அரும்புகள்..!

காத்திருப்புகள்
மனைவி காத்திருக்கிறாள்...........
குழாயடியிலே..!!
கணவன் காத்திருக்கிறான்..........
டாஸ்மார்க் கடையிலே..!!
இருவரும் காத்திருப்பது...........
தண்ணீ(ரு)க்காக..!!!
                                                            *  *  *  *

காத்திருத்தல் சுகமாயிருந்தது....
நீ காதலனாயிருந்த வரை..!
காத்திருப்பது கடுப்படிக்கிறது.......
நீ கணவனான பின்..!!
                                                         *  *  *  *
அன்னையர் தினம்
அன்னையர் தினம் கொண்டாடும்
அரங்கின் அவைத்தலைவரின்
அன்னை மட்டும்
அனாதை ஆசிரமத்தில்......!!
         

அன்னையர் தினம்
கொண்டாடுவதைவிட்டுவிட்டு
அன்னையை எப்போது
கொண்டாடப்போகிறோம் நாம்..????
                                                     * *  *  *

Monday, 25 April 2011

நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா?


ஒரு பூங்காவில் குழந்தைகள் சிலர் விளையாடுகிறார்கள். அங்குள்ள இரும்புக் கம்பியைப் பிடித்தபடி சில குழந்தைகள் சுற்றி விளையாடுகிறார்கள். அங்கு என்னைப் போலவே ஒரு அப்பிராணி குழந்தையும் வருகிறது. அதற்கு விளையாட கம்பியில் இடமில்லை. உடனே அது கைகள் இரண்டையும் விரித்தபடி தனியே சுற்றி விளையாடுகிறது.  வேகமாக சுற்ற சுற்ற மற்ற குழந்தைகள் கைபிடியை விட்டு விலகினாலும் திரும்ப உடனே இறுக்கி கம்பியைப் பிடித்துவிடுகிறது.  ஆனால் தனியே கம்பியில்லாமல் சுற்றும் குழந்தை மட்டும் வேகமாக சுற்ற சுற்ற மயங்கி பிடிமானம் இல்லாததால் தலைசுற்றி கீழே விழுந்து விடுகிறது.  காயம் பட்டு விடுகிறது.

இதே போன்றுதான் நாம் அனைவரும் உறுதியான என்றும் நம்மை கைவிடாத இறைவன் என்ற கம்பை பற்றாமல் நான் என்ற அகங்காரம் கொண்டு தனியே இந்த உலகில் மாயையில் சிக்குண்டு அடிபடுகிறோம்.

கம்பன் என்ற நாமம் இறைவனுக்குண்டு.  நம் காஞ்சிபுரத்தில் இறைவன் பெயர் ஏகம்பன் என்பதே.  கம்பன் போன்ற இறைவனை இறுக்கிப்பிடித்திடில், உலகச்சுனாமியிலிருந்து (சுழல், சூறாவளி எல்லாம் பழைய உவமை) உலக மாயை, மயக்கங்களிலிருந்து ரொம்ப சுலபமாக விடுபடலாம்.

”பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”
என்னமாவது பிரச்சினைனு வந்துச்சாக்கும் ஓடிப்போய் ”சிக்கெனப்பிடித்தேன் சிவபெருமானே” என்று அவன் தாள் வணங்கி அங்க இங்க அசைய விடாமல் இறுக்கி பிடிச்சுடுங்க.  அப்புறம் பாருங்க நடக்கிறதை. .........
நிச்சயமாய் சரண்டர் அதாங்க சரணாகதி ஆனப்புறம் எத்தனை பிரச்சனை ஓடிருக்கும் உங்களுக்கே நிறைய அனுபவம் இருக்குமே.... கொஞ்சம் யோசித்துப்பாருங்க.

அருளுடைய சுடரே, ஜோதி மயமானவனே என இறைவனை வணங்குகிறோம்.  சுடர் என்றால் ஒளி. அப்போ சுடர் சுடுமோ என்று ஐயம் வருவது இயல்புதான் . அதனாலேயே அருளுடைய சுடர், ”அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை” என்கிறார் இராமலிங்க அடிகள்.

நாங்கள் அவனைப் சிக்கெனப் பிடித்தால், எங்கள் பசித்துன்பம் போகுமோ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.  வயிற்றுப்பசி மட்டுமல்ல, உயிற்பசியும் சோ்ந்தே போகும்.  இறைவன் இனிப்பான, நன்கு பழுத்த கனி போன்றவன்.
”வேர்த்தாவி மயங்காது கனிந்த நறுங்கனியே” என்கிறார் இராமலிங்கர்.

இந்த இறைவனை எங்கதான் கண்டுபிடிக்கிறது என்று கேட்கிறீர்களா?

”தெருளிடத்து அடியார் சிநதையுள் புகுந்த செல்வமே, சிவபெருமானே!”
அதாவது மனம் தெளிவான சிவஞானிகளின் உள்ளக் கோவிலில் இருக்கிறார்.  நல்லா கவனிங்க.......... உங்க மனச தெளிவா வச்சுக்கிட்டா உங்க மனசுக்குள்ளதான்ங்க இறைவன் இருக்கார். புரிஞ்சுச்சா இப்போ....

வெளியே எங்கும் போய் போலிசாமியார்களிடத்தில் ஏமாறாமல், உங்களுக்குள்ளேயே இருக்கிறவரை கெட்டியா பிடிச்சுக்கங்க.... வாழ்க்கையில் மலைபோல் வரும் துன்பம் கூட பனி போல ஓடிடும்ங்க....சரண்டர் ஆகித்தான் பாருங்களேன். சும்மா ஜிவ்வுனு பறக்கற மாதிரி இருக்கா?...... அப்புறமென்ன சும்மா நடத்துங்க உங்க ராஜ்ஜியத்தை!.... 

Friday, 15 April 2011

யாதுமாகி நின்றாய்!கரம்பிடித்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை நீ.....

கோபமே கோபிக்குமளவு
வதைத்திருக்கிறேன் நானுனை.......
புன்னகையை தவழவிட்டு 
பாடம் சொன்னாய் நீயெனக்கு!

வலிகள்தவிர வேறெதுவும்
தந்ததில்லை நானுனக்கு........
மகிழ்ச்சி மலரை மட்டுமே
சமர்பித்தாய் நீயெனக்கு!

தவறுகள் பல புரிந்து 
தடுமாறி விழுந்தேன் பலசமயம்....
தந்தையாய் நீயிருந்து
தக்கவழி காட்டினாய்!மௌனத்தை மொழியாக்கி
பேசாதிருந்தேன் பலகாலம்......
அன்னையாய் அரவணைத்து
அன்பை ஊட்டி ஆளாக்கினாய்!

குற்றங்களையும் குறைகளையும்
உன்னிடம் தேடியிருக்கிறேன் சண்டையிட.....
அன்பையும் நேசத்தையும் மட்டுமே
என்னில் நீ கண்டாய்!

களங்கமற்ற அன்பால் எனை
கட்டிப்போட்ட கணவனே!
கடல்கடந்து நீயும் கரைமேல் நானும்
கலங்கியே நிற்கிறோம் காதலுடன் ஓருயிராய்.........


Link

Related Posts Plugin for WordPress, Blogger...