Wednesday 10 October 2012

ராதிகாவும் என் புதுக்காரும்-கலா!! கலா.!!...கலக்கலா...!!


சிலு சிலுவென்று வீசும் காற்றில் தோள்மேல் கைபோட்டபடி தோழமையுடன் கதைகள் பேசி களித்தவாறு காரோட்டுவது ஒரு சுகமான அனுபவம். அதுவும் இனிய பழங்கதைகளை அசைபோட்டபடி அசால்ட்டாய் காரோட்டி நம்முடன் இருப்பவரை உயிருக்கு பயந்து நடுங்கச் செய்வதில் ஏனோ எனக்கு ஆனந்தமோ ஆனந்தம் பரமானந்தம்.

அன்றும் ராதிகாவை அருகே அமர்த்தி கதைத்துக்கொண்டே வண்டி ஓட்டினேன்.  " என்னதான் சொல்லு இது அருமையான ரோடு. ஒரு வாரமாய் நானும் காரோட்ட கற்றுக்கொண்டேன் . சூப்பராய் ஓட்டுவேண்டி" , இது ராதிகா.  நான் அதை கவனியாதது பேல் பாவனையில் "கலாவதி வோல்ஸ்வேகன் செகண்ட்ஸில் வாங்கியிருக்கிறாளாம்" என்றேன்.

"லேடீஸ்கு டூவீலரைவிட 4 வீலர்தான் பாதுகாப்பு. நான் ஒரே வாரத்தில் சூப்பராய் ஓட்டக் கற்றுக்கொண்டேன். இந்த வண்டியை கொஞ்சதூரம் நான் ஓட்டரேன் பாருடி. அருமையான ரோடுடி இது. எவ்வளவு ஃப்ரீயா இருக்கு பாரு " இது ராதிகா.

என்னவரிடம் ஒரு மாதம் சாம , பேத,  தான,  தண்டம் எல்லாவற்றையும் பிரயோகித்து  வாங்கியதாயிற்றே இந்த வண்டி. அவ்வளவு சுலபத்தில் யாரையும் தொடவிடுவேனா என்ன!!

தமிழ்நாட்டையோ தமிழ்நாடுவாழ் மக்களின் நலனையோ பற்றி சிறிதும் கவலைகொள்ளாத அக்கறையில்லாத மத்திய அரசைப்போல, ராதிகா என்னைப்பற்றியோ என் புத்தம் புது காரைப்பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தான் ஓட்டியே தீரவேண்டுமென்ற தீர்மானத்தில் இருந்தாள்.


" ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும்டி. இது புது வண்டி. கலாவதியுடையது போல செகண்ட்ஸ் இல்லை என்றபடி எதிர்வரும் வாகனத்திற்கு வழிவிட்டபடி பிரேக்கில் கால்வைத்தால் கர்.....புர்.....கட....புட...கிறீச்...என ஒரே சப்தம். ”அம்மாடியோவ் இதென்ன கலாட்டா” என்றபடி ஒருவித கவலையான முகத்தோடு காரை ஓரம்கட்டி இறங்கினேன்.

" என்னடியம்மா ஆச்சு உன் வண்டிக்கு? வண்டி ஓட்ட கத்துக்கும்போதே சில ஈஸியான பிராப்ளம்க்கு சால்வ் பண்ண சொல்லிகுடுத்திருப்பாங்களே....கொஞ்சம் பாருடி. சரியாச்சுன்னா நானே ஓட்டுவேன்."  ராதிகா புலம்பல்.

நான் அம்மாவைச்சுற்றிவரும் மந்திரிகள் போல் இரண்டொரு சுற்று காரைசுற்றிவந்து உதடுபிரித்து தோள் குலுக்கினேன்..

தூரத்தில் கலாவதி காரோட்டிவருவதைப்பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டடேன்.  ”குயிலுக்கு என்ன பிரச்சினையோ” என்றபடி காரைவிட்டு இறங்கினாள். கவலையோடு காரை சுற்றி சுற்றி வந்தவளை பார்வையால் ஒரு வெட்டு வெட்டியபடி " இது புத்தம் புதிய கார். ஆத்ரைஸடு சர்வீஸ் வந்து பார்த்துப்பான். வேறு யாரும் தொடவேண்டாம்" என்றேன் நறுக்குத் தெரித்தபடி.

ராதிகா, கலாவதிகாரையும் என்னையும் கலாவையும் மாறி மாறிப் பார்த்தவள், "இவள் அதுக்கு சரிப்பட்டுவரமாட்டா" என்று வடிவேலு சிங்கமுத்து பாணியில் முடிவெடுத்து டக்கென்று ஓடிப்போய் கலாவதியின் காரில் டிரைவிங் சீட்டில் உட்கார்ந்துவிட்டாள்.

என்னைப் பரிதாபமாக பார்த்தபடி, " ஏய்........ஏய்....நில்லுடி ஸ்டார்ட் பண்ணாதே...." என்றபடி கலா ஓடிப்போனதையும் , போனால் போகிறதென்று கலாவை காரில் ஏற்றிக்கொண்ட ராதிகாவையும் பார்த்தால் சற்று வேடிக்கையாகத்தானிருந்தது எனக்கு


க்ரீச்........கர்......கட....கட....க்ரீச்....என்ற சப்தங்கள் என் காதைப்பிளந்தன, கூடவே கலாவின் அலறலும்.....

நான் சாவதானமாய் போய் காரின் டாஷ்போட்அருகில் மறைவாய் இருந்த ஸ்டார்ட் கீயை ஆன் செய்து காரைத்திருப்பி வந்தவழியே அதிவேகமாய் ஓட்டிவந்துவிட்டேன்.

பின்ன என்ன நான் ஓட்டுவேன் என்று அடம்பிடிக்கும் கத்துக்குட்டிகளுக்கு என் புத்தம்புது வண்டியைக் கொடுத்து பரிட்சை செய்ய நான் என்ன பைத்தியக்காரியா??

பாவம் கலா நிலையையும் அவள் வண்டியின் நிலையையும் நினைத்து ஒரு நிமிடம் இறைவனிடம் பிரார்த்தனைதான் செய்ய முடிந்தது என்னால்.

நாளை எந்த ஹாஸ்பிடலில் போய் கலாவைப் பார்க்கவேண்டுமோ என்ற கவலையுடன் காரோட்டி வந்தேன்.

அன்றிலிருந்து டூவீலர் ஓட்டத்தெரிந்த தோழியைக்கூட என்னுடன் காரில் அழைத்துப்போவதில்லை .......... நீங்க எப்படி?? 

Link

Related Posts Plugin for WordPress, Blogger...