Wednesday, 10 October 2012

ராதிகாவும் என் புதுக்காரும்-கலா!! கலா.!!...கலக்கலா...!!


சிலு சிலுவென்று வீசும் காற்றில் தோள்மேல் கைபோட்டபடி தோழமையுடன் கதைகள் பேசி களித்தவாறு காரோட்டுவது ஒரு சுகமான அனுபவம். அதுவும் இனிய பழங்கதைகளை அசைபோட்டபடி அசால்ட்டாய் காரோட்டி நம்முடன் இருப்பவரை உயிருக்கு பயந்து நடுங்கச் செய்வதில் ஏனோ எனக்கு ஆனந்தமோ ஆனந்தம் பரமானந்தம்.

அன்றும் ராதிகாவை அருகே அமர்த்தி கதைத்துக்கொண்டே வண்டி ஓட்டினேன்.  " என்னதான் சொல்லு இது அருமையான ரோடு. ஒரு வாரமாய் நானும் காரோட்ட கற்றுக்கொண்டேன் . சூப்பராய் ஓட்டுவேண்டி" , இது ராதிகா.  நான் அதை கவனியாதது பேல் பாவனையில் "கலாவதி வோல்ஸ்வேகன் செகண்ட்ஸில் வாங்கியிருக்கிறாளாம்" என்றேன்.

"லேடீஸ்கு டூவீலரைவிட 4 வீலர்தான் பாதுகாப்பு. நான் ஒரே வாரத்தில் சூப்பராய் ஓட்டக் கற்றுக்கொண்டேன். இந்த வண்டியை கொஞ்சதூரம் நான் ஓட்டரேன் பாருடி. அருமையான ரோடுடி இது. எவ்வளவு ஃப்ரீயா இருக்கு பாரு " இது ராதிகா.

என்னவரிடம் ஒரு மாதம் சாம , பேத,  தான,  தண்டம் எல்லாவற்றையும் பிரயோகித்து  வாங்கியதாயிற்றே இந்த வண்டி. அவ்வளவு சுலபத்தில் யாரையும் தொடவிடுவேனா என்ன!!

தமிழ்நாட்டையோ தமிழ்நாடுவாழ் மக்களின் நலனையோ பற்றி சிறிதும் கவலைகொள்ளாத அக்கறையில்லாத மத்திய அரசைப்போல, ராதிகா என்னைப்பற்றியோ என் புத்தம் புது காரைப்பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தான் ஓட்டியே தீரவேண்டுமென்ற தீர்மானத்தில் இருந்தாள்.


" ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும்டி. இது புது வண்டி. கலாவதியுடையது போல செகண்ட்ஸ் இல்லை என்றபடி எதிர்வரும் வாகனத்திற்கு வழிவிட்டபடி பிரேக்கில் கால்வைத்தால் கர்.....புர்.....கட....புட...கிறீச்...என ஒரே சப்தம். ”அம்மாடியோவ் இதென்ன கலாட்டா” என்றபடி ஒருவித கவலையான முகத்தோடு காரை ஓரம்கட்டி இறங்கினேன்.

" என்னடியம்மா ஆச்சு உன் வண்டிக்கு? வண்டி ஓட்ட கத்துக்கும்போதே சில ஈஸியான பிராப்ளம்க்கு சால்வ் பண்ண சொல்லிகுடுத்திருப்பாங்களே....கொஞ்சம் பாருடி. சரியாச்சுன்னா நானே ஓட்டுவேன்."  ராதிகா புலம்பல்.

நான் அம்மாவைச்சுற்றிவரும் மந்திரிகள் போல் இரண்டொரு சுற்று காரைசுற்றிவந்து உதடுபிரித்து தோள் குலுக்கினேன்..

தூரத்தில் கலாவதி காரோட்டிவருவதைப்பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டடேன்.  ”குயிலுக்கு என்ன பிரச்சினையோ” என்றபடி காரைவிட்டு இறங்கினாள். கவலையோடு காரை சுற்றி சுற்றி வந்தவளை பார்வையால் ஒரு வெட்டு வெட்டியபடி " இது புத்தம் புதிய கார். ஆத்ரைஸடு சர்வீஸ் வந்து பார்த்துப்பான். வேறு யாரும் தொடவேண்டாம்" என்றேன் நறுக்குத் தெரித்தபடி.

ராதிகா, கலாவதிகாரையும் என்னையும் கலாவையும் மாறி மாறிப் பார்த்தவள், "இவள் அதுக்கு சரிப்பட்டுவரமாட்டா" என்று வடிவேலு சிங்கமுத்து பாணியில் முடிவெடுத்து டக்கென்று ஓடிப்போய் கலாவதியின் காரில் டிரைவிங் சீட்டில் உட்கார்ந்துவிட்டாள்.

என்னைப் பரிதாபமாக பார்த்தபடி, " ஏய்........ஏய்....நில்லுடி ஸ்டார்ட் பண்ணாதே...." என்றபடி கலா ஓடிப்போனதையும் , போனால் போகிறதென்று கலாவை காரில் ஏற்றிக்கொண்ட ராதிகாவையும் பார்த்தால் சற்று வேடிக்கையாகத்தானிருந்தது எனக்கு


க்ரீச்........கர்......கட....கட....க்ரீச்....என்ற சப்தங்கள் என் காதைப்பிளந்தன, கூடவே கலாவின் அலறலும்.....

நான் சாவதானமாய் போய் காரின் டாஷ்போட்அருகில் மறைவாய் இருந்த ஸ்டார்ட் கீயை ஆன் செய்து காரைத்திருப்பி வந்தவழியே அதிவேகமாய் ஓட்டிவந்துவிட்டேன்.

பின்ன என்ன நான் ஓட்டுவேன் என்று அடம்பிடிக்கும் கத்துக்குட்டிகளுக்கு என் புத்தம்புது வண்டியைக் கொடுத்து பரிட்சை செய்ய நான் என்ன பைத்தியக்காரியா??

பாவம் கலா நிலையையும் அவள் வண்டியின் நிலையையும் நினைத்து ஒரு நிமிடம் இறைவனிடம் பிரார்த்தனைதான் செய்ய முடிந்தது என்னால்.

நாளை எந்த ஹாஸ்பிடலில் போய் கலாவைப் பார்க்கவேண்டுமோ என்ற கவலையுடன் காரோட்டி வந்தேன்.

அன்றிலிருந்து டூவீலர் ஓட்டத்தெரிந்த தோழியைக்கூட என்னுடன் காரில் அழைத்துப்போவதில்லை .......... நீங்க எப்படி?? 

Sunday, 8 July 2012

நான் ஈ - உயரப்பறந்து நம்மை ஈர்க்கிறது!!

நான் ஈ - உயரப்பறந்து நம்மை ஈர்க்கிறது!!எஸ்.எஸ். ராஜமவுலியின் கதை, திரைக்கதை, ,இயக்கத்தில் வெளிவந்து 3 மொழிகளிலும் பறந்து நம்மை ஈர்க்கிறது ஈ.

நானி, சமந்தா, சந்திப் மற்றும் மார்க்ட்டிங்கிற்காக சந்தானம் என்று கலைகட்டுகிறது ஈ.  கதை என்னவோ ஒன்லைன்தான். நானி சமந்தாவை விரும்புகிறார். சுதீப் சமந்தாவை அடையவிரும்பி நானியை கொல்கிறார்.  இறந்த நானி எப்படி ”நான் ஈ” ஆக மாறி சுதீப்பை பழிவாங்குகிறார் என்பதே கதை.

 லாஜிக் இல்லா மேஜிக் தான் நான் ஈ. லாஜிக் பார்க்காமல் ரசித்தால் மிகமிக சுவாரஸ்யமாய் காட்சிகளை நகர்த்தி நம்மை சீட்டின் நுனிக்கே கொண்டுவருவதிலிருந்தே ராஜமௌலியின் திறமை புரிகிறது.

இந்தப்படத்தில் உண்மையான கதாநாயகர்கள் என்றால் அது கம்யூட்டர் கிராபிக்ஸ்ஸில் கலக்கியிருக்கும் மேக்ஸிமா டீமும், ஒளிப்பதிவாளர் K.K. செந்தில் குமாரும் மற்றும் அளவான திகட்டாத இசையமைத்த மரகதமணியையும் சொல்லலாம்.  இவர்களின் கூட்டு உழைப்பினால் நம்மையும் உற்சாகத்தின் உயரத்தில் பறக்கவைக்கிறது ஈ.

                                       

நானி கதாபாத்திரம் தன் காதலை வெளிப்படுத்துமிடங்கள் மற்றும் நடிப்பு வெகு சிறப்பு மட்டுமல்ல சிறிது வித்தியாசமான காட்சியமைப்பும் கூட.

அழகு பதுமை சமந்தா அலட்டலில்லாமல் இயல்பாய் நடித்துள்ளார்.  நானி தன் கவனத்தைக் கவர செய்யும் செயல்களை தான் வேண்டுமென்றே அலட்சியப்படுத்தினாலும் அதை நானி பாஸிடிவ்வான காரணங்கள் சொல்லி சமாளிப்பதை ரசித்து சிரிக்குமிடங்கள் கொள்ளை அழகு. 

சுதீப் படம் முழுக்கு ஈயுடன் போராடும் வில்லத்தனமான கேரக்டர்.  கம்யூட்டர் கிராபிக்ஸில் வரும் ஈயை கற்பனை செய்து இவர் நடிக்கும் நடிப்பும் முகபாவனைகளும் பாராட்ட வார்த்தைகளில்லை. நிச்சயம் தமிழ் சினிமா இவரை வரவேற்கும் என்பதில் ஐயமில்லை.

                              

ஈ காரை ஆக்ஸிடென் ஆக்குவது, சுதீப்பை தூங்கவிடாமல் செய்வது, சமந்தாவுடன் உடல் அசைவிலேயே எண்ணங்களை வெளிப்படுத்துவது, சந்தீப்புக்கு கொடுத்த தொல்லைகளை சமந்தாவிடம் செய்துகாட்டி விளக்குவது போன்ற காட்சிகளில் மிகைப்படுத்தப்படாத கம்யூட்டர் கிராபிக்ஸ் உபயோகித்திருப்பதே படத்தின் மிகப்பெரிய பலம்.

ஈ பழிவாங்க கிளம்பும் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் விசில் சப்தம் காதைப் பிளக்கிறது.  சந்தானம் என்ட்ரியிலும் அதே கதைதான்.  ஆனால் வசனங்களில் கிரேஸி டச் ரொம்ப கம்மி. வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கிரேஸி வசனங்கள்.

பாடல்கள் மனம் மயக்கும் மெலடி மலர்கள். ஈ பழிவாங்குமிடங்களில் பாடல்களின் சில வரிகளை உபயோகித்திருப்பது நல்ல இனிமை. 

படத்தில் கிராபிக்ஸ் இருப்பதே பெரிதாய் தெரியாதளவுக்கு படத்துடன் இயல்பாய் கலந்துகொடுத்து நம்மை படத்துடன் ஒன்றச்செய்து மிகமிக சுவாரஸ்யத்துடன் ஈ யைப் பறக்கச்செய்த டைரக்டர் ராஜமவுலிக்கு ஒரு சபாஷ்!!

ஈ - குழந்தைகள் முதல்  அனைத்து வயதினரையும் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

குடும்பத்துடன் பார்க்கலாம்!. ஈ உயரப்பறக்கிறது!!

படங்கள் உதவி - தினமலர்.

Wednesday, 14 March 2012

நாம் தொலைத்து வரும் நம் பொக்கிஷங்கள்...!! (Missing-Traditional-Treasures)

ணக்கம் நட்புகளே..! நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இப்பதிவின் மூலமாக சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன். 

ந்த புண்ணிய பாரத்தில் பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமையடைகிறோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் நம் இந்திய மண்ணின் பெருமைகளான சித்த மருத்துவம், புராண காலத்திய தொழில் நுட்பங்களான விமானத்தின் முன்னோடி விசைகள், தர்ம சிந்தனைகள், தனி மனித ஒழுக்கம், வேதாந்த சாரம், நவ கோள்களின் கோலாட்டங்கள், சாரங்கள், அண்டவெளியின் சலனங்கள் பற்றிய நுட்பங்கள் மற்றும் முனிவர்கள் கண்டறிந்த மந்திரங்கள் அவற்றினால் மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற அரிய பொக்கிஷங்கள் அனைத்தையும் நம் ஏமாளித்தனத்தினாலும் அறியாமையாலும் அன்னிய நாட்டினருக்கு தாரைவார்த்து விட்டு நிற்கிறோம். 
தாரை வார்த்த விஷயங்களையே திரும்ப ஏதோ ஒரு பெரிய அதிசயமான அதி அற்புதமான ஒன்றாக நினைத்து அவர்களிடமிருந்து வந்ததாய் எண்ணி நாம் அவற்றை கடைபிடித்து உபயோகித்து பெருமைபடுகிறோம். நம் சொந்த தாய்நாட்டில் நமக்கு சொந்தமான பொக்கஷங்கள்தான் அது என்பதையே அறியமுடியாத அப்பாவிகளாயிருப்பதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லை..!
ம் பாரத நாட்டின் மூலிகைகளும், அஷ்டாங்க யோகங்களும், நவ யாகங்களும் அந்நிய நாட்டிலிருந்து குப்பிகளில் அடைக்கப்பட்ட மருந்துகளாகவும் அக்குபஞ்சர் போன்ற மருத்துவ சிகிச்சைகளாகவும் அயல்நாட்டு காப்புரிமையோடு திரும்பி வருவதை பார்க்கும்போது மனம் வேதனையால் தவிக்கிறது.

இந்த நிலை மாற என்ன செய்யப் போகிறோம் நாம்???

னியும் இந்த நிலை தொடராமல் இருக்க வேண்டுமானால் நம் நாட்டின் பாரம்பரிய பெருமைகளை நாம் முதலில் உணர்வதோடு நம் இளைய சமுதாயத்தினர்களுக்கும் உணர்த்த வேண்டும். அரிய கலைகளையும் சக்திகளையும் அடைந்தவர்கள் மூடிமூடி தங்களுக்குள் அவற்றை வைத்திடாமல் நான்கு பேர் அறியும்படி அனைத்தையும் அனைவருக்கும் கற்றுககொடுக்கவேண்டும்.
ணம் சம்பாதிப்பது மட்டுமே நம் குறிக்கோளாயிருக்காமல் அதனோடு நாம் பிறந்த இந்த புண்ணிய தேசத்திற்கும் நம்மாள் இயன்ற கைமாறாக இந்திய திருநாட்டின் சிறப்புகளையும் பாரம்பரியத்தையும் போற்றி உலக மக்கள் அனைவரும் அறியும்படி பாரதத்தின் பெருமையை உயர்த்த பாடுபடவேண்டும். இல்லையேல் பாரதத்தாய் நம்மை மன்னிக்கவே மாட்டாள்.
(படங்கள்.- கூகுள் தேடுபொறிக்கு நன்றி)
ம் இந்திய திருநாட்டை உலகளவில் மிகமிக உன்னதமான நாடாக திகழச்செய்ய வேண்டியது நம் கடமை. அதற்கு ஆவன செய்ய ஒவ்வொருவரும் எடுத்துவைக்கும் முதல் அடியை நம் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். அழிந்து வரும் நம் அரிய பண்டைய நுண்கலைகளை மருத்துவத்தை , நம் முனிவர்கள் மற்றும் முன்னோர்கள் புராணங்கள் வழியே நம்மிடம் விட்டுச்சென்ற நுட்பங்களை அணுவிஞ்ஞானம் முதல் ஆதவன் கதிர் விஞ்ஞானம் வரை உணர்ந்து இளைய தலைமுறைகளுக்கு்ம் அவற்றின் அருமைகளை விளக்கி பயன்படுத்தி காப்பாற்றச் செய்யவேண்டும்.

வாழ்க பாரதம்...! வளர்க பாரத பண்பாடு..!!
* * * * * * *

Monday, 20 February 2012

விருது எனும் அட்சயப்பாத்திரம் - யான் பெற்ற விருது பெறுக இப்பதிவுலகம்


அன்பு உள்ளங்களுக்கும் அருமை உறவுகளுக்கும் என் இனிய வணக்கங்கள். என் அரிதான வருகைக்கு உண்மையான காரணம் என் இணைய இணைப்பும் , மின்சாரமும் மற்றும் குடும்ப சூழ்நிலையும் தான்.  ஆனாலும் என் மௌனத்தை கலைத்து பதிவுப்பக்கம் வரத்தூண்டிய முக்கிய காரணி ”VERSATILE BLOGGER AWARD" . (THANKS TO SISTER YUVARANI TAMILARASAN, KIRUKALKAL BLOG) .

சகோதரி கிறுக்கல்கள் யுவராணி தமிழரசன் எனக்கு வழங்கிய இந்த விருதினை , என் பதிவுகளும் பிடித்துப்போய் (!) எனக்கு ஃபாலோயராக இணைந்து என்னை ஊக்கப்படுத்திய அன்பு தோழமைகளுக்கு சமர்பிக்கிறேன்.

மொய்க்கு மொய் கலாச்சாரத்துக்கு நடுவே, நான் தவிர்க்க இயலாத சூழ்நிலை காரணமாக உங்களையும் உங்கள் பதிவுகளையும் தொடரமுடியவில்லை என்றாலும் மொய் எதிர்பார்க்காமல் தொடர்ந்து எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்து என்னுடன் கைகோர்த்துள்ள என் பதிவுலக நட்புகளை நினைத்து பெருமைகொள்கிறேன். தலைவணங்குகிறேன்.


பிடித்த சில விஷயங்களை பகிர்ந்துகொண்டு இந்த விருதையும் 5 நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

எனக்குப் பிடித்தவை:

1. மழை எனக்குப்பிடித்ததில் முதலிடம் வகிப்பது. மழையில நனைவது மிகவும் பிடிக்கும்.

2. வாசித்தல் சுவாசிக்காமல் கூட இருப்பேன். வாசிக்காமல் என்னால் இருக்க முடியாது. பதிவு எழுதுவதைவிட நண்பர்கள் பதிவை வாசிப்பது பிடிக்கும். தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள இது உதவும்.

3. ஆலயம்   எனக்கு மிகவும் பிடித்த இடம். அமைதியான  பழமையான ஆலயங்களில் அமர்ந்து தியானம் செய்வதும் ஆலயத்தின் கலைநயத்தை ரசிப்பதும் மிகவும் பிடிக்கும்

4.  மலைவாசஸ்தலம்.  மலையும் மலைசார்ந்த இடமும் என்னைக் கவர்ந்தவை.

5. மெலடி பாடல்கள் மெல்லிய மெலடி பாடல்கள் கேட்கப் பிடிக்கும்.

6.  மழலைகள்  மழலைகள் குறும்புக்கு நான் அடிமை. மழலைகளுடன் நேரம் செலவிட பிடிக்கும.

இது எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் எல்லோரையும் எனக்கு ரொம்பப்பிடிக்குங்க........நம்புங்க ப்ளீஸ்......


பொதுவாக எனக்கு யாரையும் வெறுக்கத்தெரியாது. ஒருவரிடம் இருக்கும் தீய பழக்கங்களையும் மோசமான குணத்தையும் மட்டுமே வெறுக்கலாமே தவிர மனிதர்களை அல்ல.

இந்த விருதை நான் ஐந்து நண்பர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் பெருமையடைகிறேன்.

நான் விருதளிக்க ஆசைப்படும் வலைப்பூக்கள்:

1. கோகுல் மனதில் -  கோகுல் மகாலிங்கம்

http://gokulmanathil.blogspot.in/2011/12/blog-post.html இவரது வலைப்பூவில்
விழிப்புணர்வூட்டும் கட்டுரைகளோடு காதல் கவிதைகள் , பாதித்த நிகழ்வுகள் என்று கலந்துகட்டி அடிப்பார்.  இந்த சிறிய வயதிலேயே இவரிடம் இருக்கும்  சமுதாய அக்கறை என்னை வியக்கவைக்கிறது.

2. விழுதுகள் - மதுரை சரவணன் ஆசிரியர்

http://veeluthukal.blogspot.in/2012/01/blog-post_24.html மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்தலோடு ஆசிரியர் பணி முடிவடையாது. அவர்களின் மனவளத்திற்கும் ஆசிரியர்களே பொறுப்பு என்பதை ஆணித்தரமாக தன் பதிவுகளில் கூறும் இந்த ஆசிரியர் மிகமிக அபூர்வமான ஆசிரியர் என்பதில் பெருமைப்படுகிறேன்.

3. மாதவிப்பந்தல் - கண்ணபிரான் , ரவிசங்கர். (KRS)

http://madhavipanthal.blogspot.in/2012/02/blog-post.html தமிழின் பெருமையையும் ஆன்மிகத்தையும் இணைத்து அதிகம் விளையாடுமிடம் மாதவிப்பந்தல் .

4. வாங்க ப்ளாக்கலாம் - ஆனந்த் நாராயணன். ( அனந்து)

http://pesalamblogalam.blogspot.in/  இவருடைய கதைகள் , கவிதை, சினிமா விமர்சனம் போன்றவற்றிற்கு நான் ரசிகை.

5. வேர்களைத்தேடி - முனைவர் இரா. குணசீலன்


http://gunathamizh.blogspot.in/p/blog-page.html  இவர் தன்னுடைய மாணவர்களின் படைப்புகளையும்  திறமைகளையும் தன் பதிவின்மூலம் வெளிக்காட்டுபவர்.

Wednesday, 11 January 2012

பொங்கலோ பொங்கல் சிறுவீட்டுப் பொங்கல்..!!

அன்பான உறவுகளே..!

புத்தாண்டு மற்றும் (முன்கூட்டிய) தைத்திருநாள் நல்வாழ்த்துக்களுடன் மீண்டும் உங்களை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். (ஹய்யோ.....எங்க நிம்மதி போச்சேன்னு யார் புலம்பறது அங்க......) குயில் ரிட்டர்ன்ஸ்!!...... ஏதோ BSNL BROADBAND தயவால நீங்க இத்தனை நாட்களாக என்னோட கமெண்ட்ல இருந்து தப்பிச்சுருப்பீங்க. இனி முடியாது.

உங்க பதிவுகளில் பெரும்பான்மையானதை படிச்சுருவேன். ஆனால் கமெண்டு போடும்போது சரியாக இணைய இணைப்பு கட் ஆகிடும். திரும்ப அரைமணிநேரம் போராடினாலும் சரியாகாது. அதற்குள் மின்சாரம் கட் ஆகிடும். 3 மாதமாக போராடி பூமிக்கடியிலுள்ள இணையக்  கேபிள் எல்லாம் சரிபண்ணியிருக்கிறேன். இனி எல்லாம் சரியாகிடும் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை... ஓகே... ஓகே... நொந்த மேட்டரை விட்டுட்டு வந்த மேட்டர சொல்லிடறேன்.

ஆனாலும் உங்க எல்லோரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணினேன். இனி தொடர்ந்து உங்கள் அனைவர் பதிவுகளுக்கும் மிஸ்பண்ணாமல் வந்து தொல்லை கொடுப்பேன் என்றும், அவ்வப்போது பதிவுகளும் போட்டு கொல்லுவேன் என்றும் பயமுறுத்திக் கொ(ல்)ள்கிறேன்.

பொங்கல் சமயம் ரீஎன்ட்ரி கொடுத்ததால் பொங்கல் கதையோடுதான் பதிவு எழுதணும்னு ஒரு சொல்லப்படாத விதியின்படி அதிகம்பேர் அறியாத ஒரு பொங்கல் விழாவான சிறுவீட்டுப்பொங்கல் பற்றி சொல்றேன். ஓடிடாதீங்க... தயவுசெய்து கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டு போங்க.

பொங்கல் என்றாலே வீட்டில் பெண்களுக்கு மகிழ்ச்சியோடு வேலைப்பளுவும் சற்று அதிகம் தான். வீட்டை ஒதுங்கவைத்து (தீபாவளி பொங்கலுக்கு மட்டும்தானே அதை செய்வோம்) பழையதை கழித்து புதியது (நகைகளாக மட்டும்) வாங்கி...... வீட்டிற்கு வெள்ளையடித்து திரும்ப தட்டுமுட்டு சாமான்களை சரியாக வைத்து..... ஷ்ஷ்ஷ்....... ஹப்பா.... எவ்வளவு வேலைகள் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிஞ்சுடறளவு இருக்கும் தெரியுமா....??

எல்லோர் வீடுகளிலும் குடும்பத்தலைவிதான் புதுப்பானையில் பொங்கலிடுவார்கள். ஆனால் குழந்தைகளுக்காக கொண்டாடப்படும் பொங்கல் பற்றி தெரியுமா??

நெல்லைப் பகுதிகளில் குழந்தைகளுக்காக குழந்தைகள் சேர்ந்து கொண்டாடும் பொங்கல்தான் சிறுவீட்டுப் பொங்கல்.

குறிப்பாக பெண்குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இதை கண்டிப்பாய் கொண்டாடுவார்கள். மார்கழி மாதம் முழுதும் வீட்டின் முற்றத்தில் கோலத்தில் சாணத்தில் பூசணிப் பூ வைப்பார்கள். அந்த சாணத்தை வீட்டின் வெளியில் ஒரு மூலையில் வறட்டியாக காயவைத்திருப்பார்கள். மார்கழிமாதம் முடிந்துவரும் தைமாத வளர்பிறையில் சிறுவீட்டுப் பொங்கல் வைப்பார்கள்.

சுண்ணாம்பு அல்லது களிமண்ணால் சிறு வீடுபோன்ற படம் வரைந்து (கவனிக்க களிமண் கொண்டு கோடு போட்டு சிறு வீடு வரைவார்கள்) அந்த வீட்டுமுன் கலர்பொடியால் கோலங்கள் போடுவார்கள். வரைந்த வீட்டின் நடுவே பொங்கல் பானை வைத்து பொங்கலிடுவார்கள்.  அந்தப் பொங்கலை செய்ய குட்டீஸ் ஓடி, ஓடி ஆசை ஆசையாகச் செய்யும் உதவிகள் இருக்கே.... ஆஹா...சில குழந்தைகள் தானே செய்வேன் என்று அடம்பிடித்து அரிசியை பானையில் போடுவதிலிருந்து வெல்லம் போடுவதுவரை தன்கையால் செய்யணும்னு ரொம்ப அக்கறையோட கவனமா செய்வார்கள் தெரியுமா? அதில் அவ்வளவு சந்தோசம் மற்றும் பெருமிதம் அவர்களுக்கு.

மார்கழி முழுதும் சேர்த்துவைத்த வறட்டியில் சூடம் ஏற்றி வெற்றிலை பாக்கு ஒன்றிலும் மற்றொன்றில் இலையில் பொங்கலும் வைத்து ஆற்றில் அல்லது அருகில் நீர்நிலைகளில் விடுவார்கள். சிலர் முறத்தில் பொங்கல், வெற்றிலைபாக்கு, வாழைப்பழம் வைத்தும் ஆற்றில் விடுவார்கள்.

நீர் நிலைகளில் உள்ள சிறிய உயிர்களுக்கு்ம் உணவளிக்க வேண்டுமென்றும், நீர் நிலைகள் வணக்கத்திற்குரியவை அவைகளை மாசுபடுத்தாமல் வளம் குறையாமல் பாதுகாக்க வேண்டுமென்பதையும் குழந்தைகளுக்கு உணரச்செய்ய நடத்தப்படுவதே சிறுவீட்டுப் பொங்கல்.

தற்போது தைமாதம் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் குழந்தைகளின் விடுமுறை வசதிக்காக மாற்றிக் கொண்டாடப்படுகிறது.

சூரியன், மழை, காற்று, ஆகாயம், மண் போன்ற பஞ்ச பூதங்களின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் விளக்கும் வண்ணம் பண்டைக் காலத்திலிருந்தே இயற்கைக்கு நன்றிசெலுத்தும் விதமாக தனித்தனியே திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தார்கள் நம் முன்னோர்கள். தற்கால இயந்திர வாழ்க்கையில் அனைத்தின் அருமையும் தெரியாமல் தவறவிட்டு நம் சந்தததிகளுக்கும் இயற்கையின் பெருமைகளையும் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொடுக்காமல் அனைத்தையும் மாசுபடுத்தி அவர்களின் எதிர்காலத்திற்கு எதிரிகளாகிவிட்டோம் நாம்.

நம் இளைய தலைமுறைகளுக்கு இயற்கையை நேசிக்க மட்டுமின்றி இயற்கை வளங்களை போற்றி பாதுகாத்து விழாக்கள் மூலம் நன்றி செலுத்தவும் கற்றுக்கொடுத்தால் மட்டுமே இயற்கை சீற்றங்களிலிருந்து எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற முடியும்.

 இனியாவது விழிப்புடனிருந்து இயற்கை வளங்களின் அவசியத்தையும் அதன் தூய்மை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் நம் வருங்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வூட்ட வேண்டியது நம் கடமை.

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை (முன்கூட்டிய) தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.


* * * * * * *

Link

Related Posts Plugin for WordPress, Blogger...