Wednesday 5 October 2011

எங்கெங்கு காணினும் சக்தியடா!! (Devotional-Navarathri Spl-Shakthi) - 2

சென்ற பதிவின் தொடர்.......

இடைவேளை நீண்டதானாலும் என்னை மறக்காமல் என் பதிவை எட்டிப்பார்த்து கமெண்ட் போட்டு என்னை ஊக்குவித்த  அனைவருக்கும் நன்றிகள்.  என்னை தன் பதிவில் அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்திய சகோதர சகோதரிகளுக்கு நன்றி என்கிற 3 எழுத்துக்களில் சொல்லி முடித்துவிட முடியாது. ஆனாலும் நீங்கள் அனைவரும் எனக்கு கொடுக்கும் உற்சாகமே என்னை இன்னும் பதிவுலகில் வலம் வர வைத்திருக்கிறது.

சென்ற தொடரில் சக்தி வழிபாடுபற்றியும் எந்தெந்த தேசங்களில் எந்தெந்த பெயர்களில் வழிபாடு நடைபெற்றது என்பதையும் பார்த்தோம். இப்பொழுது நவராத்திரியில் வழிபடப்படும் அன்னையின் பிற வடிவங்களின்  பெயர்களையும் தாத்பர்யங்களையும் காண்போம்...

துர்க்கை

நவராத்ரியில் முதல் 3 நாட்கள் துர்க்கைக்கு உரியவையே. 

நல்ல செயல்களாக இருந்தாலும் தீய செயல்களாக இருந்தாலும் இரண்டுமே ஆத்ம சாதகனை உயர்நிலையை அடையவிடாமல் செய்யும் மாயைகளே. தீமையை விலக்குவதோடு நன்மையையும் விலக்கி அனைத்தையும் பிரம்மமாக உணர்வதே மனித வாழ்க்கையின் உன்னத இலட்சியமாகும்.



துர்க்கை மகிஷாசுரமர்தினியாகக் காட்சி தருகிறாள். சிங்கத்தின் மீது நின்றுகொண்டு அவள் அசுரனை பயங்கரமாகத் தாக்குகிறாள்.  கருமைநிறமுடைய அந்த அசுரன் ஆணவம், அறியாமை, மயக்கம், கோபம்ஆகிய தமோ குணத்தின் உருவமாக விளங்குகிறாள்.  பச்சை நிறம் கொண்ட துர்க்காதேவி சிவப்பு நிற  சேலை அணிந்திருக்கிறாள். அவள் எட்டு கைகளிலும் பலவித ஆயுதங்கள் ஏந்தி குணமயி என்று அழைக்கப்படுகிறாள்.  துர்க்கா தன் தொழிலுக்கு ஏற்ப ரஜோ குணம் கொண்ட உருவமாகத் திகழ்கிறாள்.

மகிஷாசுரமர்த்தினி

துர்க்கை ரஜோ குணத்தின் வடிவமாகத் திகழ்கிறாள்.  அரக்கன் தமோகுணத்தின் வடிவமாக விளங்குகிறாள். போரின் முடிவில் அரக்கனின் தீய குணங்கள் இயல்புகள் எல்லாம் அடியோடு அழிந்து அருளும் ,ஞானமும், கலையும், அருட்செயலும் , பேராற்றலும் தோன்றுகின்றன.  இந்த உண்மையை துர்க்கையின் இரண்டு பக்கங்களிலும் இரு்க்கும் சரஸ்வதி,  லட்சுமி வினாயகர் சுப்பிரமணியர் ஆகிய தேவதேவியரின் திருவுருவங்கள் விளக்குகின்றன.  பிறகு குணங்களை கடந்து விளங்கும் அதி உயர்ந்த நிலையாகிய பரம்பொருள் அடையப்பெருகிறது. இந்தக் கருத்தையே சிவபெருமானின் புறத்தோற்றமாகிய வெண்ணிறமும் அவருடைய உள்ளார்ந்த ஆழ்ந்த நிஷ்டையும் குறிப்பிடுகின்றன.

2.  காளி

காலம் என்ற தத்துவத்தின் சிறந்த விளக்கமாக காளி விளங்குகிறாள். காலத்தை தன்னுள் ஒடுக்கி வைத்திருக்கும் மாபெரும் சக்தியே காளி.
 திகம்பரி, முண்டமாலினி, கர்மருபிணி, பயங்கரி போன்ற பலநாமங்கள் காளியையே குறிக்கும்.

திகம்பரி

எல்லாத்திசைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பதனால் காளிக்குத் திகம்பரி என்ற பெயர் உண்டு.


முண்டமாலினி

காளிதேவியின் மற்றொரு திருநாமம் முண்டமாலினி. தலைகளால் கோர்க்கப்பட்ட மாலையை அணிந்தவள் என்பது அதற்குப் பொருள். குழந்தைப் பருவத்திலிருந்து வயோதிகபருவம் வரையிலுள்ள தலைகளைக் கொண்டு அந்த மாலை கட்டப்பட்டிருக்கும். மரணம் ஐந்திலும் வரலாம் ஐம்பதிலும் வரலாம் என்ற நிலையற்ற தன்மையை குறிப்பது இந்த மாலைகள்.  எல்லா உயிர்களிலும் ஆதிசக்தியிடமிருந்து தோன்றி மீண்டும் அவளிடமே ஐக்கியமாகின்றது. மரண்திலிருந்து யாரும் தப்பிவிட முடியாது. இந்த உலகம் அவளது விளையாட்டு மைதானம். கொடுத்த உயிரை மீண்டும் எப்பொழுதும எடுத்துக்கொள்வாள் என்பதை பல வயதுடைய தலைகள் குறிப்பிடுகின்றன.

கர்மருபிணி

செயல்கள் அனைத்திற்கும் சக்தியாக இருப்பவள் காளிதேவி. இதை அவள் அணிந்திருக்கும் துண்டிக்கப்பட்ட கைகளால் ஆகிய ஓட்டியாணம் விளக்குகிறது. உலகில் எங்கெல்லாம் பெரும் சக்தியின்  வெளிப்பாடு உள்ளதோ அங்கெல்லாம் தேவியின் வீரக் கரங்கள் எங்கும் எதிலும் நீண்டு பரந்திருக்கின்றன.

பயங்கரி

ஒரு கையில் வாளையும் மற்றொரு கையில் துண்டிக்கப்பட்ட ஒரு தலையையும் தேவி தாங்கி நிற்கிறாள்.வெட்டிய தலையும் இரத்தக்கறை படித்த வாளும் துன்பத்தின் அறிகுறியாகும் பேராசை, ஆணவம், சுயநலம், அநீதி, அதிகார வெறி எங்கெல்லாம் ஆட்சி புரிகின்றதோ அங்கெல்லாம் காளிதேவியின் கோரவாளும் ஆட்சி செய்யும்.  தர்மத்துக்கு மாறாக எது நடந்தாலும் அதனுடைய முடிவு அழிவாகத்தான் இருக்கும் என்பதை துண்டிக்கபட்ட தலை விளக்குகிறது.


காளிதேவி சுடுகாட்டில் ஊழிக்கூத்து ஆடுபவளாக, சிவனே அதற்கு ஆதாரமான மேடையாக தம் உடலையே கொடுப்பவராக சிவன் மேல் காளி ஆடும் நிலையில் திருஉருவம் அமைந்திருக்கிறது.

காளியை தள்ளி இருந்து பார்ப்பவர்களுக்கு , பக்தியால் அவளைஉணராதவர்களுக்கு அவள் கருமை நிறத்தவளாக, பயங்கரியாகவும் தோன்றுகிறாள். ஆனால் அவளுடைய குழந்தையாகிவிட்டவர்களுக்கு பால் நினைந்துட்டும் உலகத்தாயினும் மேலான தயாபரியாகவே அவள் திகழ்கிறாள்.


லட்சுமி தேவி எத்தனை விதங்களில் , எத்தனை பெயர்களில் நவராத்திரியில் வழிபடப்படுகிறாள் என்பதையும் சரஸ்வதியின் வழிபாட்டையும் அடுத்த தொடரில் காண்போம் , ஆதிசக்தியின் சித்தமிருந்தால்....





அனைவருக்கும் சரஸ்வதி பூஜா வாழ்த்துக்கள்..........

முந்தைய பதிவைப்பார்க்க இங்கே கிளிக் செய்யவும். 
எங்கெங்கு காணினும் சக்தியடா.!! பாகம் - 1


Link

Related Posts Plugin for WordPress, Blogger...