Wednesday, 11 January 2012

பொங்கலோ பொங்கல் சிறுவீட்டுப் பொங்கல்..!!

அன்பான உறவுகளே..!

புத்தாண்டு மற்றும் (முன்கூட்டிய) தைத்திருநாள் நல்வாழ்த்துக்களுடன் மீண்டும் உங்களை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். (ஹய்யோ.....எங்க நிம்மதி போச்சேன்னு யார் புலம்பறது அங்க......) குயில் ரிட்டர்ன்ஸ்!!...... ஏதோ BSNL BROADBAND தயவால நீங்க இத்தனை நாட்களாக என்னோட கமெண்ட்ல இருந்து தப்பிச்சுருப்பீங்க. இனி முடியாது.

உங்க பதிவுகளில் பெரும்பான்மையானதை படிச்சுருவேன். ஆனால் கமெண்டு போடும்போது சரியாக இணைய இணைப்பு கட் ஆகிடும். திரும்ப அரைமணிநேரம் போராடினாலும் சரியாகாது. அதற்குள் மின்சாரம் கட் ஆகிடும். 3 மாதமாக போராடி பூமிக்கடியிலுள்ள இணையக்  கேபிள் எல்லாம் சரிபண்ணியிருக்கிறேன். இனி எல்லாம் சரியாகிடும் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை... ஓகே... ஓகே... நொந்த மேட்டரை விட்டுட்டு வந்த மேட்டர சொல்லிடறேன்.

ஆனாலும் உங்க எல்லோரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணினேன். இனி தொடர்ந்து உங்கள் அனைவர் பதிவுகளுக்கும் மிஸ்பண்ணாமல் வந்து தொல்லை கொடுப்பேன் என்றும், அவ்வப்போது பதிவுகளும் போட்டு கொல்லுவேன் என்றும் பயமுறுத்திக் கொ(ல்)ள்கிறேன்.

பொங்கல் சமயம் ரீஎன்ட்ரி கொடுத்ததால் பொங்கல் கதையோடுதான் பதிவு எழுதணும்னு ஒரு சொல்லப்படாத விதியின்படி அதிகம்பேர் அறியாத ஒரு பொங்கல் விழாவான சிறுவீட்டுப்பொங்கல் பற்றி சொல்றேன். ஓடிடாதீங்க... தயவுசெய்து கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டு போங்க.

பொங்கல் என்றாலே வீட்டில் பெண்களுக்கு மகிழ்ச்சியோடு வேலைப்பளுவும் சற்று அதிகம் தான். வீட்டை ஒதுங்கவைத்து (தீபாவளி பொங்கலுக்கு மட்டும்தானே அதை செய்வோம்) பழையதை கழித்து புதியது (நகைகளாக மட்டும்) வாங்கி...... வீட்டிற்கு வெள்ளையடித்து திரும்ப தட்டுமுட்டு சாமான்களை சரியாக வைத்து..... ஷ்ஷ்ஷ்....... ஹப்பா.... எவ்வளவு வேலைகள் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிஞ்சுடறளவு இருக்கும் தெரியுமா....??

எல்லோர் வீடுகளிலும் குடும்பத்தலைவிதான் புதுப்பானையில் பொங்கலிடுவார்கள். ஆனால் குழந்தைகளுக்காக கொண்டாடப்படும் பொங்கல் பற்றி தெரியுமா??

நெல்லைப் பகுதிகளில் குழந்தைகளுக்காக குழந்தைகள் சேர்ந்து கொண்டாடும் பொங்கல்தான் சிறுவீட்டுப் பொங்கல்.

குறிப்பாக பெண்குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இதை கண்டிப்பாய் கொண்டாடுவார்கள். மார்கழி மாதம் முழுதும் வீட்டின் முற்றத்தில் கோலத்தில் சாணத்தில் பூசணிப் பூ வைப்பார்கள். அந்த சாணத்தை வீட்டின் வெளியில் ஒரு மூலையில் வறட்டியாக காயவைத்திருப்பார்கள். மார்கழிமாதம் முடிந்துவரும் தைமாத வளர்பிறையில் சிறுவீட்டுப் பொங்கல் வைப்பார்கள்.

சுண்ணாம்பு அல்லது களிமண்ணால் சிறு வீடுபோன்ற படம் வரைந்து (கவனிக்க களிமண் கொண்டு கோடு போட்டு சிறு வீடு வரைவார்கள்) அந்த வீட்டுமுன் கலர்பொடியால் கோலங்கள் போடுவார்கள். வரைந்த வீட்டின் நடுவே பொங்கல் பானை வைத்து பொங்கலிடுவார்கள்.  அந்தப் பொங்கலை செய்ய குட்டீஸ் ஓடி, ஓடி ஆசை ஆசையாகச் செய்யும் உதவிகள் இருக்கே.... ஆஹா...சில குழந்தைகள் தானே செய்வேன் என்று அடம்பிடித்து அரிசியை பானையில் போடுவதிலிருந்து வெல்லம் போடுவதுவரை தன்கையால் செய்யணும்னு ரொம்ப அக்கறையோட கவனமா செய்வார்கள் தெரியுமா? அதில் அவ்வளவு சந்தோசம் மற்றும் பெருமிதம் அவர்களுக்கு.

மார்கழி முழுதும் சேர்த்துவைத்த வறட்டியில் சூடம் ஏற்றி வெற்றிலை பாக்கு ஒன்றிலும் மற்றொன்றில் இலையில் பொங்கலும் வைத்து ஆற்றில் அல்லது அருகில் நீர்நிலைகளில் விடுவார்கள். சிலர் முறத்தில் பொங்கல், வெற்றிலைபாக்கு, வாழைப்பழம் வைத்தும் ஆற்றில் விடுவார்கள்.

நீர் நிலைகளில் உள்ள சிறிய உயிர்களுக்கு்ம் உணவளிக்க வேண்டுமென்றும், நீர் நிலைகள் வணக்கத்திற்குரியவை அவைகளை மாசுபடுத்தாமல் வளம் குறையாமல் பாதுகாக்க வேண்டுமென்பதையும் குழந்தைகளுக்கு உணரச்செய்ய நடத்தப்படுவதே சிறுவீட்டுப் பொங்கல்.

தற்போது தைமாதம் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் குழந்தைகளின் விடுமுறை வசதிக்காக மாற்றிக் கொண்டாடப்படுகிறது.

சூரியன், மழை, காற்று, ஆகாயம், மண் போன்ற பஞ்ச பூதங்களின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் விளக்கும் வண்ணம் பண்டைக் காலத்திலிருந்தே இயற்கைக்கு நன்றிசெலுத்தும் விதமாக தனித்தனியே திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தார்கள் நம் முன்னோர்கள். தற்கால இயந்திர வாழ்க்கையில் அனைத்தின் அருமையும் தெரியாமல் தவறவிட்டு நம் சந்தததிகளுக்கும் இயற்கையின் பெருமைகளையும் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொடுக்காமல் அனைத்தையும் மாசுபடுத்தி அவர்களின் எதிர்காலத்திற்கு எதிரிகளாகிவிட்டோம் நாம்.

நம் இளைய தலைமுறைகளுக்கு இயற்கையை நேசிக்க மட்டுமின்றி இயற்கை வளங்களை போற்றி பாதுகாத்து விழாக்கள் மூலம் நன்றி செலுத்தவும் கற்றுக்கொடுத்தால் மட்டுமே இயற்கை சீற்றங்களிலிருந்து எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற முடியும்.

 இனியாவது விழிப்புடனிருந்து இயற்கை வளங்களின் அவசியத்தையும் அதன் தூய்மை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் நம் வருங்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வூட்ட வேண்டியது நம் கடமை.

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை (முன்கூட்டிய) தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.


* * * * * * *

Link

Related Posts Plugin for WordPress, Blogger...