Friday 30 September 2011

எங்கெங்கு காணினும் சக்தியடா..!! (Devotional - Navarathri Special - Shakthi)

அன்பான உறவுகளுக்கு வணக்கம்.  மிக மிக நீண்............ட இடைவெளிக்குப்பிறகு உங்களை நவராத்ரி சிறப்பு ஆன்மீகப் பதிவின் மூலம் சந்திப்பதில் பெருமிதப்படுகிறேன். நான் கமெண்ட் வழியாக உங்கள்  அனைவரையும் அனுதினமும் அன்பாய் விசாரித்துதான் வருகிறேன்.

என் பதிவையும் எதிர்நோக்கி, அக்காச்சி பதிவெங்கே என்று அன்பாய் மிரட்டிய சகோதரர்களுக்கும் என் சோகம் அறிந்து அதில் பங்குகொண்ட என் நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் வருகை இனி சீரான இடைவெளியில் இருக்குமென்று நம்புகிறேன்.
நவராத்திரி ஆரம்பித்தாகி விட்டது. நான் பயங்கர பிஸிதான் பூஜை, சுண்டல் பொங்கல் என்று எக்கச்சக்க ஐட்டம் இருக்கே..  சரி அதிகநாள் கழித்து எழுதும் பதிவு தேவி வழிபாடு பற்றி நவராத்திரி நேரத்தில் எழுதலாமே என்றுதான் ஆரம்பித்தேன்..... இது ஒரு தொடர் பதிவுதான். என்னை ஊக்குவிக்கும் அன்பு உள்ளங்களுக்கு மறுபடியும் என் நன்றிகளை நவில்கிறேன். சரி விஷயத்துக்கு வர்றேன்.

எத்தனை விதங்களில் எத்தனை தேசங்களில் இந்த சக்தி வழிபாடு எந்தெந்த பெயர்களில் நடந்திருக்கிறது, இப்பொழுதும் நடக்கிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யத்தில் மயக்கமே வருகிறது...

இந்தியாவில் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தேவி வழிபாடு நடந்திருக்கிறது என்பதை மொகஞ்சதாரோ. ஹரப்பா போன்ற இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த தேவி மண் சிலைகள் கூறுகின்றன. சிந்து சமவெளி பகுதிகளில் கிடைத்த சக்தி தெய்வத்தின் சிலைகள் போலவே பாரசீகம், மொசடோமியா, பாலஸ்தீனம், சைப்ரஸ், கிரேக்கம், எகிப்து, துருக்கி முதலிய இடங்களிலும் கிடைத்திருப்பதாக ஆராய்சியாளர் சர் ஜான் மார்ஷல் கூறுகிறார்.

ரிக் வேதத்தில் தேவி ஸூக்தம் என்னும் பகுதியில் அன்னையை உஷஸ், ராத்திரி, அதிதி, வாக், பரந்தி, திஷணா, இடா, வாருணி என்ற நாமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரானந்தத்ததை அருளும் பரசிவத்தின் அருள்சக்திதான் பராசக்தி என்று சைவசித்தாந்தம் கூறுகிறது. தந்திர சாஸ்திரங்களில் அம்பிகையை பத்து வடிவங்களில் ”தச மகாவித்யா” என்றே அழைக்கிறது. 

தேவி உபாசகர்கள் அன்னையை ஆறுவிதங்களில் கூறுகிறார்கள். அவை பராசக்தி, ஞானசக்தி, இச்சாசக்தி, கிரியா சக்தி, குண்டலினிசக்தி, மாத்ருகா சக்தி என்பதே அந்த ஆறு சக்திகள். நம் பாரத நாட்டில் பூமி கடல் ஆறு நாடு முதலியனவும் அன்னை தேவியின் வடிவமாகவே நாம் பார்க்கிறோம். 
சக்தி வழிபாடு குறித்து சுவாமி விவேகானந்தர் தம் "கீழைநாடும் மேலைநாடும்" என்ற கட்டுரையில் ”இந்த சக்தி வழிபாடு வெளிப்படையாகவே எங்கும் இருந்து வருகிறது. ரோமன் கத்தோலிக்க மதம் மட்டுமே ஐரோப்பாவில் உள்ளது. அந்த மதத்தில் ஜெஹோவாவோ அல்லது ஏசுவோ அல்லது திரிமூர்த்தியோ இரண்டாவது ஸ்தானம் பெற்றிருக்கின்றனர். அங்கே தாய்க்குத்தான் வழிபாடு. குழந்தை ஏசுவைக் கையில் ஏந்திய தாய்தான் பூஜிக்கப்படுகிறாள். எங்கும் எல்லா இடங்களிலிருந்தும் இரவு பகலாக ”ஆவே மரியா! ஆவே மரியா!” என்ற ஒலிதான் கேட்கிறது” என்கிறார். 

பிரம்மா முதலிய தேவர்களாலும் அறிந்து கொள்ள இயலாதவள் அஜ்ஞேயா, அந்தம் அல்லது முடிவு இல்லாதவள் அனந்தா. எவராலும் கிரகிக்க முடியாதவள் அலஷ்யா. ஆரம்பம் இல்லாதவள் அஜா. எங்கும் ஒருத்தியாக இருப்பவள் ஏகா. ஒருத்தியே பல ரூபமாக இருப்பவள் நைகா என்று தேவி உபநிஷத் கூறுகிறது. 

எங்கும் பரந்து விரிந்துள்ள அவளது நிலையை பூரணி, பராசக்தி, இராஜராஜேஸ்வரி,  மூலப்பிரகிருதி ஆகிய திருநாமங்கள் உணர்த்துகின்றன.  படைத்தலை செய்யும்போது அவள் பிரம்மணி. காத்தலை செய்யும்போது அவளே வைஷ்ணவி. அழித்தலை செய்யும்போது ருத்ராணி எனப்படுகிறாள்.

நவராத்திரியில் வழிபடப்படும் அன்னையின் பல வடிவங்களை இனி வரும் நாட்களில் பார்ப்போம்.....
* * * * * * *

Link

Related Posts Plugin for WordPress, Blogger...