Wednesday 29 June 2011

இப்படியும் பேசியிருப்பார்களோ??- நான் ரசித்த கோட்டுச் சித்திரங்கள்

இந்த அரசியல்வாதிகளை நம்பமுடியாதப்பா. இப்படியும் பேசியிருப்பார்கள். சும்மாக்காச்சுக்கும்.....ஒரு காமெடிதாங்க. நான் ரசித்ததை நீங்க முடிந்தால் ரசிங்க. இல்லைனா விடுங்க ஜூட்...




எதுவும் என் சொந்த கற்பனையல்ல. எனக்கு மெயிலில் வந்ததை நான் உங்களுடன் பகிர்ந்து ரசித்தேன்.




Thursday 23 June 2011

என்ன தகுதியில்லை நம் பதிவர்களிடம்?

என்ன தகுதியிருக்கிறது??


                                               

தற்போது வெளியாகியுள்ள அவன் இவன் திரைப்படம் வெளிவந்தவுடன் நம் பதிவுலகில் தொடர்ந்து உலாவரும் ஒரு கேள்வியே மேலே நான் குறிப்பிட்டது.

”என்ன தகுதியிருக்கிறது எங்கள் பாலாவை விமர்சிக்க?”  என்ன ஒரு கொலைவெறியோட கேள்வி பாருங்க!

பாலா மிகப்பெரிய திறமையான படைப்பாளி என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஜீவாத்மாவா?... இல்லை பரமாத்மாவா?. அன்னை சீதாதேவியை தீக்குளிக்க வைத்தது சரியா தவறா என்று கடவுள் ஸ்ரீராமரையே விமர்சனம் செய்து பட்டிமன்றம் வைப்பவர்கள் நாம். நமக்கா பாலாவின் படத்தையும் அவரின் இயக்கத்தையும் விமர்சிக்கும் தகுதியில்லை??

திரைப்படக் கல்லூரி போய் DFD  படித்தவர்கள் மட்டும் தான் படம்பார்க்கவும் விமர்சிக்கவும் தகுதியிருக்கிறது என்கிறார்களா? இல்லை 4,5 படம் இயக்கி ஹிட்ஸ் கொடுக்கிற தகுதிவேண்டுமென்கிறார்களா? என்ன தகுதியை எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு சத்தியமா தெரியலைங்க...

ஐயா புண்ணியவான்களே, புண்ணியவதிகளே ஹோட்டலில் காசுகொடுத்து சாப்பிடுபவர்கள் சாம்பாரில் உப்பில்லை என்றாலோ, கூட்டில் காரம் இல்லை என்றாலோ சொல்லக்கூடாதா??  இதற்கு சமையல்கலை தெரிந்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. நன்றாய் ருசியறிந்து ரசனையோடு (வக்கணையாய்!!?) சாப்பிடத் தெரிந்திருந்தாலே போதுமானது.

அதுபோல்தான் ஒரு இயக்குனரின் இயக்கம், கதை இன்னபிறவற்றை விமர்சிக்க ஒரு இயக்குனராகவோ, கதைவசனகர்தாவாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

காசுகொடுத்து படம் பார்க்கும் யாருக்கும் அந்தப்படத்தையும் இயக்குனரையும் விமர்சிக்கும் உரிமையிருக்கிறது. தன் கை பணத்தை செலவழித்து, நேரத்தையும் செலவழித்து படம் பார்கிற ஒரு தகுதி போதாதா விமர்சனம் செய்ய??

பாலா தன் எல்லா படங்களிலு்ம் விளிம்பு மனிதர்களையே முன்னிலைப்படுத்தி படம் எடுக்கிறாரே. மற்ற கதைக்களத்துக்கும் வாருங்கள். வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கையையும் படமெடுங்கள் என்று விமர்சனம் எழுதுவது மாபெறும் கொலைக்கு்ற்றமாம். இப்படி சொல்ல உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது. இப்படித்தான், இவர்கள் கதையைத்தான் படமெடுக்க வேண்டுமென்று பாலாக்கு அறிவுரை சொல்ல நீங்கள் யார் ? உங்களிடம் கேட்டுத்தான் படமெடுக்க வேண்டுமென்ற தலையெழுத்து பாலாவுக்கு இல்லை.....இன்னும் என்னென்னவோ வசவுகள் அவன்இவன் திரைப்படத்தை நடுநிலையோடு விமர்சித்த நம் பதிவர்களுக்கு.

நாங்கள் ஒன்றும் பாலாக்கு எதிரி இல்லையே.  இன்னும் சொல்லப்போனால் அவரின் தீவிர ரசிகர்கள்தான். அபிமானிகள்தான். ஆனாலும் நம் அபிமான இயக்குனர் ஒரே டைப்பான கதைகளை திரும்ப திரும்ப எடுத்தால் எப்படி? ”பாலா உங்கள் அபரிதமான திறமையை வேறு வேறு கதைகளத்தில் காண்பித்து உங்களின் அடுத்த கட்ட வளர்சிக்கு, அடுத்த உயர்ந்த படிக்கு செல்லுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஒரே .ஃபிளேவரில் ஐஸ்கீரிம் வேண்டாமே. விதவிதமான ஃபிளேவரில் ரெடிபண்ணி எங்களுக்கு விருந்தளியுங்கள் என்றுதான் கேட்கிறோம். இப்படி கேட்பது ஒரு கொலைக்குற்றமா??
                                                      
சத்தியஜித்ரே இந்தியாவின் வறுமையைமட்டுமே தன் படங்களில் காண்பி்க்கவில்லையா?  சத்யஜித்ரே செய்யலாம் நம் பாலா செய்யக்கூடாதா என்கிறார்கள். 

ஐயா அதத்தானுங்க நானும் சொல்றேன். இந்தியாவுக்கு ஒரு சத்யஜித்ரே போதும். நம்ம பாலா பாலாவாகவே வெவ்வேறு கதைக்களத்துக்கு வரட்டும் என்கிறேன். எவராலும் வெல்லமுடியாத சிகரத்தை பாலா தொடவேண்டுமென்று ஆசைப்படுகிறோம். ஏனென்றால் நாங்களும் பாலாவின் தீவிர ரசிகர்கள்தான்.  எங்கள் அபிமான இயக்குனரின் இயக்கத்தை விமர்சிக்கும் தகுதியும் உரிமையும் எங்களுக்கில்லாமல் வேறு யாருக்கிருக்கிறது??

பெரிய இயக்குனர்கிட்ட அதிகப்படியாக எதிர்பார்த்து ஒரு ரசிகன் போவதில் தப்பொன்றுமில்லையே?. சேது, பிதாமகன், நந்தா எடுத்தவர்கிட்ட இன்னும் அதிகமாக ஒரு ரசிகனாக எதிர்பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது? 
சாதாரண சொதப்பல் படமோ, மசாலாப்படமோ எடுக்க பாலா என்கிற வித்யாசமான முயற்சியுள்ள அதிதிறமைசாலியான இயக்குனர் எதற்கு? இன்னும், இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் அவரிடம். அதற்கான தகுதி பாலாவிடம் உள்ளது. அவர் படத்தை விமர்சிக்கும் தகுதி, அவர் வளர்சியில் அக்கறைகொண்ட அவரது தீவிர அபிமானிகளான எங்களிடமும் உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, காசுகொடுத்து படம் பார்க்கிற தீவிரமான ரசிகர்கள் என்ற தகுதியைவிட வேறென்ன பெரி.........ய தகுதிவேண்டுமென்று சத்தியமாய் எனக்குத் தெரியல.... உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள் நண்பர்களே!!

Wednesday 8 June 2011

பிரியமானத் தோழியே...!

நடனத்தில் வல்ல நகைமுக மாது
நளினத்தின் அழகோ மன்மதன் தூது.!
இடையின் அழகோ சிறு கொடியழகு
இதைவிட அழகு உலகத்தில் ஏது..!!??
சின்னஞ்சிறு சங்கதனில்
கருந்திராட்சை கோர்த்தாற்போல்
மின்னி மின்னி எழில் காட்டும்
கண்கள் வான தாரகையோ..!??

சித்திரையின் நிலவதுவோ
மின்னிடும் வதனமோ..??
பிரியமானவரை பிரிப்பதுதான்
பரமனின் விளையாட்டோ..?
நாமிருவர்தான் இதற்கு ஆதாரமோ..!?....
வான வெளியிலே நிலவது ஆடையிலே
நம்மிருவர் மனம் மட்டும்
சோகத்தில் மூழ்குவதேன்..?
உயிர்பிரியும் நிலையிலும்
உறவு பிரிவதிலே கொடுமையதிகம்
அதை அனுபவத்தில் உணர்ந்தபின்னும்
இன்னும் ஏனோ தயக்கம்..?
பிரிவைத் தவிர வழியில்லா நிலையில்
கண்ணீர்தான் நட்புக்குப் பரிசோ..??...
* * * * * * *

Friday 3 June 2011

துயிலாத கண்கள்..!!

அவள் நிலவென்னும் வதனத்தில்
கண்களைக் காணவில்லை நான்....
கருவண்டுகளைத்தான் கண்டேன்..!!
அவள் இதழில்....
கோவைப்பழச் சிவப்பையே கண்டேன்!!
அன்னமே இவளிடம்தான்
நடைபயின்றதோ??


மானும் இவளைக் கண்டுதான்
மருண்டோடியதோ..??
மயிலும் நாட்டியத்தில்
தோல்விகண்டது இவளிடம்!!

குயிலின் குரல்கொண்டவள்
குன்றாத ஒளியை மேனியாக்கி,
எனக்கு துயிலாத கண்களைக்
கொடுத்துவிட்டாள்..!!
* * * * * * *

Wednesday 1 June 2011

நிலவும் வானும், கதிரும் நானும்..!

இரவு வானம்

வான வீதியில்
மேகங்களை குடையாக்கி
நட்சத்திர குழந்தைகளு்டன்
நிலவுப் பெண்ணவள்
தன் காதலன் கதிரவனைத்
தேடித் திரிகிறாள்!!

* * * * *

நீலவான நீச்சல் தடாகத்தில்
தன் நட்சத்திர தோழிகளுடன்
நிலா இளவரசி
இரவில்
நீச்சல் பயில்கிறாள்...
* * * * *  


செங்கதிரவன் வரவு
உடல் எங்கும் நீலநிற உடையில்
நளினமாய் சிரித்திடும் பெண்ணவள்
தன் காதலனை கண்டதனால்
சிவந்த தன் முகத்தை
சிறிதுசிறிதாய் நாணத்தால்
உயர்த்துதல் போலே........
நீல சேலை கட்டிய மலைமகளின்
மெல்லிய உடலிலிருந்து
சிறிதுசிறிதெனவே தன்
முகத்தை உயர்த்தினான்
சிவந்த செங்கதிரோன்...!!
* * * * * * *

Link

Related Posts Plugin for WordPress, Blogger...