Friday 29 April 2011

எதிரெதிரே இரு வீடுகள்..!!

எதிரெதிரே இரு வீடுகள்
எக்குத்தப்பாய் ஏற்றத்தாழ்வுகள்
வருடத்திற்கொன்றெனவே
தவறாமல் ஈன்றிடுவாள் ஒருத்தி...........

வாரம், நாள் தவறாமல்
பிள்ளைவரம் வேண்டி
கோயில்குளம்
சுற்றிடுவாள் மற்றொருத்தி..........

எதிரெதிரே இரு வீடுகள்
எக்குத்தப்பாய் ஏற்றத்தாழ்வுகள்!
குடிக்க கூழ் இல்லாமல்,
விளையாட சொப்புசாமானில்லாமல்...........
வயிறு ஒட்டி
வறுமை கொடிகட்டி
வாழ்ந்தது ஒரு வீட்டில்..........

அள்ளிப்புசித்திட ஆளில்லாமல்
ஆறிக்கிடக்கும் அறுசுவையுணவுடன்........
வறுக்கே வறுமைவந்து
வளமுடன் நிற்குது
மற்றொரு வீட்டில்..........

எதிரெதிரே இரு வீடுகள்
எக்குத்தப்பாய் ஏற்றத்தாழ்வுகள்!

எந்தையின் திருவுளம்
எவரொருவர் அறியவல்லார்???
* * * * * **

Wednesday 27 April 2011

சின்னச் சின்னக் கவிதை அரும்புகள்..!

காத்திருப்புகள்
மனைவி காத்திருக்கிறாள்...........
குழாயடியிலே..!!
கணவன் காத்திருக்கிறான்..........
டாஸ்மார்க் கடையிலே..!!
இருவரும் காத்திருப்பது...........
தண்ணீ(ரு)க்காக..!!!
                                                            *  *  *  *

காத்திருத்தல் சுகமாயிருந்தது....
நீ காதலனாயிருந்த வரை..!
காத்திருப்பது கடுப்படிக்கிறது.......
நீ கணவனான பின்..!!
                                                         *  *  *  *
அன்னையர் தினம்
அன்னையர் தினம் கொண்டாடும்
அரங்கின் அவைத்தலைவரின்
அன்னை மட்டும்
அனாதை ஆசிரமத்தில்......!!
         

அன்னையர் தினம்
கொண்டாடுவதைவிட்டுவிட்டு
அன்னையை எப்போது
கொண்டாடப்போகிறோம் நாம்..????
                                                     * *  *  *

Monday 25 April 2011

நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா?


ஒரு பூங்காவில் குழந்தைகள் சிலர் விளையாடுகிறார்கள். அங்குள்ள இரும்புக் கம்பியைப் பிடித்தபடி சில குழந்தைகள் சுற்றி விளையாடுகிறார்கள். அங்கு என்னைப் போலவே ஒரு அப்பிராணி குழந்தையும் வருகிறது. அதற்கு விளையாட கம்பியில் இடமில்லை. உடனே அது கைகள் இரண்டையும் விரித்தபடி தனியே சுற்றி விளையாடுகிறது.  வேகமாக சுற்ற சுற்ற மற்ற குழந்தைகள் கைபிடியை விட்டு விலகினாலும் திரும்ப உடனே இறுக்கி கம்பியைப் பிடித்துவிடுகிறது.  ஆனால் தனியே கம்பியில்லாமல் சுற்றும் குழந்தை மட்டும் வேகமாக சுற்ற சுற்ற மயங்கி பிடிமானம் இல்லாததால் தலைசுற்றி கீழே விழுந்து விடுகிறது.  காயம் பட்டு விடுகிறது.

இதே போன்றுதான் நாம் அனைவரும் உறுதியான என்றும் நம்மை கைவிடாத இறைவன் என்ற கம்பை பற்றாமல் நான் என்ற அகங்காரம் கொண்டு தனியே இந்த உலகில் மாயையில் சிக்குண்டு அடிபடுகிறோம்.

கம்பன் என்ற நாமம் இறைவனுக்குண்டு.  நம் காஞ்சிபுரத்தில் இறைவன் பெயர் ஏகம்பன் என்பதே.  கம்பன் போன்ற இறைவனை இறுக்கிப்பிடித்திடில், உலகச்சுனாமியிலிருந்து (சுழல், சூறாவளி எல்லாம் பழைய உவமை) உலக மாயை, மயக்கங்களிலிருந்து ரொம்ப சுலபமாக விடுபடலாம்.

”பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”




என்னமாவது பிரச்சினைனு வந்துச்சாக்கும் ஓடிப்போய் ”சிக்கெனப்பிடித்தேன் சிவபெருமானே” என்று அவன் தாள் வணங்கி அங்க இங்க அசைய விடாமல் இறுக்கி பிடிச்சுடுங்க.  அப்புறம் பாருங்க நடக்கிறதை. .........
நிச்சயமாய் சரண்டர் அதாங்க சரணாகதி ஆனப்புறம் எத்தனை பிரச்சனை ஓடிருக்கும் உங்களுக்கே நிறைய அனுபவம் இருக்குமே.... கொஞ்சம் யோசித்துப்பாருங்க.

அருளுடைய சுடரே, ஜோதி மயமானவனே என இறைவனை வணங்குகிறோம்.  சுடர் என்றால் ஒளி. அப்போ சுடர் சுடுமோ என்று ஐயம் வருவது இயல்புதான் . அதனாலேயே அருளுடைய சுடர், ”அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை” என்கிறார் இராமலிங்க அடிகள்.

நாங்கள் அவனைப் சிக்கெனப் பிடித்தால், எங்கள் பசித்துன்பம் போகுமோ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.  வயிற்றுப்பசி மட்டுமல்ல, உயிற்பசியும் சோ்ந்தே போகும்.  இறைவன் இனிப்பான, நன்கு பழுத்த கனி போன்றவன்.
”வேர்த்தாவி மயங்காது கனிந்த நறுங்கனியே” என்கிறார் இராமலிங்கர்.

இந்த இறைவனை எங்கதான் கண்டுபிடிக்கிறது என்று கேட்கிறீர்களா?

”தெருளிடத்து அடியார் சிநதையுள் புகுந்த செல்வமே, சிவபெருமானே!”
அதாவது மனம் தெளிவான சிவஞானிகளின் உள்ளக் கோவிலில் இருக்கிறார்.  நல்லா கவனிங்க.......... உங்க மனச தெளிவா வச்சுக்கிட்டா உங்க மனசுக்குள்ளதான்ங்க இறைவன் இருக்கார். புரிஞ்சுச்சா இப்போ....

வெளியே எங்கும் போய் போலிசாமியார்களிடத்தில் ஏமாறாமல், உங்களுக்குள்ளேயே இருக்கிறவரை கெட்டியா பிடிச்சுக்கங்க.... வாழ்க்கையில் மலைபோல் வரும் துன்பம் கூட பனி போல ஓடிடும்ங்க....சரண்டர் ஆகித்தான் பாருங்களேன். சும்மா ஜிவ்வுனு பறக்கற மாதிரி இருக்கா?...... அப்புறமென்ன சும்மா நடத்துங்க உங்க ராஜ்ஜியத்தை!.... 

Friday 15 April 2011

யாதுமாகி நின்றாய்!



கரம்பிடித்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை நீ.....

கோபமே கோபிக்குமளவு
வதைத்திருக்கிறேன் நானுனை.......
புன்னகையை தவழவிட்டு 
பாடம் சொன்னாய் நீயெனக்கு!

வலிகள்தவிர வேறெதுவும்
தந்ததில்லை நானுனக்கு........
மகிழ்ச்சி மலரை மட்டுமே
சமர்பித்தாய் நீயெனக்கு!

தவறுகள் பல புரிந்து 
தடுமாறி விழுந்தேன் பலசமயம்....
தந்தையாய் நீயிருந்து
தக்கவழி காட்டினாய்!



மௌனத்தை மொழியாக்கி
பேசாதிருந்தேன் பலகாலம்......
அன்னையாய் அரவணைத்து
அன்பை ஊட்டி ஆளாக்கினாய்!

குற்றங்களையும் குறைகளையும்
உன்னிடம் தேடியிருக்கிறேன் சண்டையிட.....
அன்பையும் நேசத்தையும் மட்டுமே
என்னில் நீ கண்டாய்!

களங்கமற்ற அன்பால் எனை
கட்டிப்போட்ட கணவனே!
கடல்கடந்து நீயும் கரைமேல் நானும்
கலங்கியே நிற்கிறோம் காதலுடன் ஓருயிராய்.........


Friday 1 April 2011

மழையும் நானும்

மழையை ரசிக்காதவர் யாராவது உண்டா? மழைக்கு மயங்காதவர் மாநிலத்தில் யாருமில்லை என்பதே உண்மை. உடலோடு மனதையும், உயிரையும் சேர்த்து சிலிர்க்கவைக்கும் பொல்லாத போக்கிரிப்பயல்.
பால வயதில் காகிதக்கப்பல் விட்டு மகிழ்ந்த வ.உ.சி.கள் நம்மில் நிறையபேர் உண்டு. இப்போ நம் சிறார்களுக்கு சிட்டியில் அந்த வாய்ப்பு ஏது? அடைமழையில் அம்மா அப்பாக்கு தெரியாமல் நனைந்து மகிழ்ந்த கொண்டாட்டங்கள் எத்தனை எத்தனையோ.? ...இப்போகூட கணவருக்கு தெரியாமல் கொட்டுகிற மழையில் நனைவது தனி சுகம்தான். (யாரும் போட்டுகொடுதுடாதீங்கப்பா......) மழைக்கும் எனக்குமுள்ள m-seal பந்தம்தான் கீழே உள்ள பதிவு.

பள்ளிப் பருவத்தில் 
பதின்ம வயதினில் 
எனக்கே தெரியாமல்
எனைதிருடி தோழியாக்கிகொண்ட
தூறல் மழையே 

ஒவ்வொரு முறையும் நீ வருகையிலே 
சொட்ட சொட்ட நனைந்தபடி 
தட்டாமாலை ஆடிய ஆனந்தம் 
எத்தனை எத்தனையோ...............
இன்று ஏக்கப் பெருமூச்சுகளாய்
நினைவலைகள் மட்டுமே என்னுடன்.

என் வாழ்க்கை தாளின் 
ஒவ்வொரு வரிகளிலும் 
என் வளர்ச்சி கண்டு 
களிப்புற்ற தோழனே
வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில் எல்லாம் 
வருகை தந்தென்னை வாழ்த்திச்செல்லும்
வானுலக தேவனே!

நினைவிருக்கிறதா உனக்கு !
பெண்பார்க்க என்னவர்
(பெருங்கூட்டமாய் ?!!!!!!) வந்தபோது 
பூமழையாய் பெய்து எனைசீண்டி 
பூரிப்படைந்தாய்!
மணமகளாய் மணமேடையில் எனக்கு
மங்கள நாண் பூட்டும் வேளையில்
கனமழையாய் வந்தென்னை 
களிப்புறவே ரசித்துநின்றாய் !

வளைகாப்பு நேரத்தில்
தப்பாமல் வருகைதந்து 
அன்னையாய் அரவணைத்து 
ஆசிகூறி வாழ்த்திபோனாய்!

பிரசவ சமயத்தில்
பிறழாமல் நீவந்து
ஆறுதல் கூறி வேதனைபோக்கி 
ஆதரவாய் நீ நின்றாய்.

உன் ஒவ்வொரு வருகையிலும் 
வரவேற்று உன் ஸ்பரிச தழுவலில் 
உன்னில் கரைந்து 
என்னை மறந்திருந்த
இன்பமான தருணங்கள் 
எத்தனை எத்தனையோ!

மற்றொரு பிறவி வந்திட்டால்
உன்னை பிரசவிக்கும்
முகிலாய் நான் மாறி
உன்கடன் தீர்க்க விழைகின்றேன்.
* * * * * *
எடிட்டிங் உதவி : நண்பர் பிரவீன்குமார்

Link

Related Posts Plugin for WordPress, Blogger...